8-வது ஆண்டில் மக்கள் நீதி மய்யம்... சாதித்தது என்ன? சறுக்கியது என்ன?
7 ஆண்டுகளை நிறைவு செய்து 8-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி.
நடிகர் கமல்ஹாசன்.. தமிழ் சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத பெயர். ஆனால் அரசியலில் அவர் எப்படி? அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி எப்படி? 7 ஆண்டுகளை நிறைவு செய்து 8-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது அவரது கட்சி. இத்தனை ஆண்டுகளில் ஒரு அரசியல்வாதியாக கமல்ஹாசனின் செயல்பாடுகள் எப்படி? அவரது கட்சியின் சமூக பங்களிப்பு என்ன என்பதைப் பற்றி சற்றுப் பார்ப்போம்..
2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவக்கினார் நடிகர் கமல்ஹாசன். மதுரை ஒத்தக்கடை பகுதியில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தி அவர் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அந்த விழாவில் அப்போதைய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காணொளி வாயிலாக வாழ்த்து செய்தி விடுத்தார். கட்சியின் கொடியானது கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் ஆறுகரங்கள் இணைந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதாவது தென்னிந்தியாவை குறிப்பாக அந்த ஆறு என்ற எண்ணிக்கை இருந்தது. கட்சியின் சின்னமாக டார்ச் லைட் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பி பதவி...கமலுக்கும், வைகோவுக்கும் கிடைக்குமா? மோதும் சிபிஎம்...தேமுதிகவுக்கு கிடைக்குமா?
அன்றைய தினம் ”நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’ தமிழகம் விழித்தெழட்டும்’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால் உண்மையில் அவரது அரசியல் பயணம் அவ்வாறுதான் இருந்ததா என்று கேள்வி எழுப்பினால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கினார் கமல். அதில் இந்திய குடியரசுக் கட்சியோடு கூட்டணி வேறு. ஆனால் இரண்டு தொகுதிகளில் அவர்களது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அந்த தேர்தலில் மொத்தம் 4 கோடியே 20 லட்சத்து 83 ஆயிரத்து 544 வாக்குகள் பதிவாகின. இதில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெறும் 1,613,708 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அதாவது 3.72 சதவித வாக்குகள் ஆகும். அக்கட்சியின் பொதுச்செயலாளர் மகேந்திரன் கோவை தொகுதியில் அதிகபட்சமாக 1,45,104 வாக்குகள் வாங்கி இருந்தார். சென்னை, கோவை, மதுரை ஆகிய நகர்ப்புறங்களில் மட்டும் மநீம-க்கு ஓரளவு வாக்குகள் கிடைத்தன. கிராமப்புறங்களில் அப்படியொரு கட்சி இருப்பதாகவே காணப்படவில்லை.
இதில் கிடைத்த பாடத்தை வைத்துக் கொண்டு 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் கமல். யார் யார் தெரியுமா?.. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, கே.எம்.ஷெரீப்பின் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம். இவர்கள் யாருமே தமிழக அரசியல் களத்தில் தடம் பதிக்காதவர்கள். இருப்பினும் இந்த கூட்டணி தேர்தலை சந்தித்தது. தனது கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை டிவியில் உடைத்து கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் கமல். மக்கள் நீதி மய்யம் 142 தொகுதிகளில் போட்டியிட்டது. கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கினார். ஆனால் அவர் உட்பட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவினார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் கமல்.
இந்த அரசியல் சரிபட்டு வராது என்பதை புரிந்து கொண்ட கமல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் பக்கம் கரைஒதுங்கினார். அதன்பிறகு அவரது கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறத் தொடங்கினர். அதைப்பற்றி கவலைப்படாத கமல்ஹாசன், 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரது கட்சியினர் அந்த தேர்தலில் எங்குமே போட்டியிடவில்லை. மாறாக 2025-ல் மாநிலங்களவையில் ஒரு சீட்டு மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்படும் என திமுக தலைமை வாக்குறுதி அளித்தது. வருகிற ஜுலை மாதம் மாநிலங்களவையில் காலியாகும் திமுகவின் இடங்களில் ஒன்று கமலுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கமலை சந்தித்து பேசியது இதனை உறுதிப்படுத்துகிறது.
இடைப்பட்ட காலத்தில் திமுகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு திமுகவினரைப் போல் கம்பு சுற்றும் நிலைக்கும் தள்ளப்பட்டார் கமல்ஹாசன். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் திமுக குறித்து ஏதேனும் அறிக்கை வெளியிட்டால் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி போன்று கமலும் பதில் சொல்ல வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதே உண்மை.
இந்த சூழ்நிலையில் தான் 8-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மக்கள் நீதி மய்யம். வெறும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை மட்டும் தனது கட்சி அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளார் கமல். எஞ்சியவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே தொடக்கவிழாவை கொண்டாட வேண்டும் என்பது உத்தரவு. கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட் கம்பெனியைப் போல, அதாவது அவரது ராஜ்கமல் இண்டர்நேஷன்ல் பிலிம்ஸ் போல மநீம-வை மாற்றி வைத்துள்ளார் கமல் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
இப்போது கட்டுரையின் தொடக்க வரிக்கு வருவோம்.
நடிகர் கமல்ஹாசன்.. தமிழ் சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத பெயர். ஆனால் அரசியல்வாதி கமல்ஹாசன்... தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் தவிர்த்து விட வேண்டியப் பெயராகி விட்டதோ என கவலை தெரிவிக்கின்றனர் கமல் ரசிகர்கள்..
இதையும் படிங்க: நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலம்: 'பாதுகாப்பு கோட்டை'யாக மாறிய தலைநகர் டெல்லி; 2500 சிசிடிவி, 70 ஆயிரம் வீரர்கள் குவிப்பு