தேசிய கல்விக் கொள்கையை அரசியல் ஆக்காதீர்..! முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்..!
தேசிய கல்விக் கொள்கையை அரசியல் ஆக்காதீர் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை. இதனால் தமிழகத்துக்கு உரிய கல்வி நிதியை வழங்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியாக அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என்பது கூட்டாட்சி தத்துவத்தை மீறுவது ஆகும். லட்சகணக்கான மாணவர்கள் ஆசிரியர்களின் நலன் கருதி கல்வி நிதி 2152 கோடி ரூபாயை உடனடியாக வழங்கும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு பதில் அளித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
இதையும் படிங்க: அடித்து ஆடும் அண்ணாமலை & கோ.. செம்ம குஷி ஆகிப்போன பி.எல் சந்தோஷ்..!
நமது நாட்டின் கல்வி முறையில் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். பிரதமர் மோடிக்கு நீங்கள் எழுதிய கடிதம் கூட்டாட்சியின் அம்சங்களுக்கு எதிரானது. கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. பல்வேறு மாற்றங்களை செய்து, சீர்திருத்தங்களுக்கும் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்ததிலும் தமிழ்நாடு முன் வரிசையில் உள்ளது. இருப்பினும் அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக வேண்டாம் .தேசிய கல்விக் கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பது பொருத்தமற்றது .
தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் நமது மொழிகள் மற்றும் கலாச்சார பன்முகத் தன்மையை பாதுகாக்காமல் எந்த மொழியையும் திணிக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.
மாநில கல்வி சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை செய்யும் வகையில் தேசிய கல்விக் கொள்கை நெகிழ்வானதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சமக்ர சிக்ஷா, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை உடன் இணைக்கப்பட்டு உள்ளது .
தேசிய புதிய கல்விக் குழுவின் 2020 என்பது வெறும் சீர்திருத்தம் மட்டும் அல்ல. இந்தியாவின் கல்வி முறையை உலகளாவிய தரத்திற்கு உயர்த்த முயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தொலைநோக்கு பார்வைக் கொண்டது" என்றுஅந்த கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.
காசி தமிழ் சங்கமம் மற்றும் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளை மேற்கோள் காட்டி, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார்.
தமிழ் மொழி நிச்சயமானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது என்று பிரதமர் நரேந்திர மோடி 2022 ஆம் ஆண்டு சென்னைக்கு விஜயம் செய்த போது குறிப்பிட்ட கருத்துக்களையும் இதற்காக அவர் மேற்கோள் காட்டி இருக்கிறார்.
திருக்குறளில் பல மொழிபெயர்ப்புகள் பல இந்திய மொழிகள் வெளியிடப்பட்டுள்ளது என்றும் பிராந்திய மொழிகளை கற்க வசதியாக அனுவாதினி மற்றும் பாஷினி போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மொழிபெயர்ப்பு கருவிகள் உருவாக்கப்பட்டு இருப்பதையும் பிரதான் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
தமிழகத்தின் தொடர்ச்சியான எதிர்ப்பானது, கொள்கை வழங்கும் வாய்ப்புகளை மாணவர்கள் இழக்கச் செய்கிறது என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: உலகத் தாய்மொழி நாள்.. மு.க.ஸ்டாலின், அண்ணாமலை கூறியது என்ன..?