தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலங்கானாவில் தேர்வு மையமா? இ.பி.எஸ். கண்டனம்
வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவது மத்திய அரசு பணியிடங்களில் இளைஞர்கள் அதிக அளவு சேர வேண்டும் என்ற உந்துதலை குறைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே துறைக்கு ஆள்சேர்க்கும் ஆர்.ஆர்.பி. தேர்வு வருகிற 19ந் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தமிழ்நாட்டை சோ்ந்த தேர்வர்கள் பலரும் விண்ணப்பித்தனா். முதல் நிலை தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 2 ஆம் கட்ட ஆர்.ஆர்.பி. தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு, தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்று நெடுந்தூரத்தில் ஒதுக்கீடு செய்தால் எப்படி தேர்வு எழுத செல்ல முடியும் என தமிழக தேர்வர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனிடையே, ஆர்.ஆர்.பி. தேர்வு எழுத்தும் தமிழக தேர்வர்களுக்கு, தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாய்மூடி வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு! ரயில்வே தேர்வு மைய விவகாரத்தில் சீமான் விளாசல்.
ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது தேர்வர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தெற்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான 2ம் கட்டத் தேர்வு வரும் மார்ச் 19 அன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90% தேர்வர்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், இதுபோன்ற குளறுபடிகள் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேரவேண்டும் என்ற உந்துதலைக் குறைத்துவிடும் என்பதையும் மத்திய அரசு உணரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
எனவே, தேர்வர்களின் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, தமிழ்நாட்டுத் தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கட்சியை விட்டுவிலகியவர்களின் நிலைமை தெரியுமா..? செங்கோட்டையனுக்கு அதிமுகவின் ஆவேச அட்டாக்..!