உடல் தானம் செய்ய போறேன்.. ஆனால் என் இதயத்தை மட்டும்..! ஷிகான் ஹுசைனி உருக்கம்..!
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி உடல் தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி கே.பாலசந்தர் மூலம் புன்னகை மன்னன் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை என சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ரஜினிகாந்த் நடித்த ப்ளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் படத்திலும் ஹுசைனி வேலை செய்துள்ளார். விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த ஹுசைனி, விஜய்க்கு உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்திருந்தார். மேலும் பலருக்கு வில் வித்தை பயிற்சியையும் அவர் அளித்துள்ளார்.
இந்த நிலையில், தான் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஷிகான் ஹுசைனி அதிர்ச்சி தரும் விஷயத்தை கூறியிருந்தார். இதனால் அவரது மாணவர்கள், வில்வித்தை மற்றும் கராத்தே கலைஞர்கள் என பலரும் வேதனையில் ஆழ்ந்தனர். புற்று நோயின் 4வது நிலையை அடைந்துவிட்டதாகவும், தான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும் என்றும் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன் எனவும் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கராத்தே மாஸ்டருக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு!
இதனிடையே ஷிகான் ஹுசைனியின் மருத்துவ சிகிச்சைக்காக தமிழக அரசின் சார்பில் 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இதற்கிடையில் தனது உடலை தானம் செய்வதாக ஷிகான் ஹுசைனி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஹுசைனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக எனது உடலை தானம் செய்கிறேன்., நான் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீ ராமசாமி உடையார், தனது இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக இருந்தவர் என்றும் தனது சினேக் பைட் வேர்ல்டு ரெக்கார்ட் உலக சாதனை நிகழ்வுக்கும் தலைமை தாங்கியவர் என்றும் குறிப்பிட்டார். ஆனால், என்னுடைய இதயத்தை மட்டும் பாதுகாப்பாக கராத்தே மற்றும் வில் வித்தை மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஹுசைனியின் இந்த உருக்கமான பதிவை கண்ட அனைவரும், உடல் தானம் செய்வதை கனத்த இதயத்தோடு பாராட்டினாலும், அவரது ரசிகர்கள் மற்றும் மாணவர்களின் இதயத்தில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: மனச விட்டுறாதீங்க அண்ணா..! ஷிகான் ஹுசைனிக்கு ஆறுதல் கூறிய அண்ணாமலை..!