மாணவிகளே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்.!! ஊக்கத்தொகை வழங்கும் ரஷ்யா.. போரால் சரிந்த பிறப்பு விகிதம்
ரஷ்யாவில் மாணவிகள் குழந்தைபெற முன் வந்தால் கணிசமான நிதி உதவி வழங்கப்படும் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் போர் எதிரொலியாக வீழ்ந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் வேகமாக அதிகரித்து வரும் மக்கள் பெருக்கத்தால் குடும்ப கட்டுப்பாடு திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருவதை தொடர்ந்து, தற்போது ரஷ்யாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. உக்ரைன் போர் எதிரொலியாக ரஷ்யாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதை சரிகட்டி குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்க ரஷ்ய அரசு முன் வந்துள்ளது.
ரஷ்யாவில் 25 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே திருமணம் செய்து குழந்தை பெற முன் வந்தால் 1 லட்சம் ரூபிள் (இந்திய மதிப்பில் 81 ஆயிரம் ரூபாய்) ஊக்ககத்தொகை வழங்கப்படும் என்று அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'மாஸ்கோ டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஊக்கத்தொகை பெற தகுதி உள்ள மாணவிகள், 25 வயதுக்கு உட்பட்ட உள்ளூர் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழு நேர மாணவிகளாகவும், கரேலியாவில் வசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: ‘டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்’: ஐஐடி ரூர்கே மின்அஞ்சலைப் பார்த்து ‘ஷாக்’ ஆகிய கேட் விண்ணப்பதாரர்..
குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு போனஸ் கிடைக்காது. அதே நேரத்தில் திடீர் நோய் தாக்குதல் காரணமாக குழந்தை இறந்து விட்டாலோ அல்லது ஊனமுற்ற குழந்தைகளை பெற்றெடுத்தாலோ தாய்மார்களுக்கு ஊக்கத்தொகை திரும்பப் பெறப்படுமா என்பதை பற்றியும் தெளிவான அறிவிப்புகள் இல்லை.
நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு முதல் பாதியில் 5,99600 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், ரஷ்யாவின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு சரிவை கண்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் மிக குறைவான பிறப்புகள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16,000 குழந்தைகள் குறைவு. ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் இளம் பெண்களை குழந்தை பெற ஊக்குவிக்கும் வகையில் இதே போன்ற சலுகைகள் செயல்படுத்தப்படுகின்றன. மத்திய ரஷ்யாவில் உள்ள டான்ஸ் நகரிலும் இதே போன்ற திட்டம் அமலில் உள்ளது. குறைந்தது 11 பிராந்திய அரசாங்கம் இந்த சலுகைகளை வழங்கி வருவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் வழக்கமான பிரசவ கால ஊக்கத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த பிறப்பு விகிதம், வயது வந்தோர் இறப்பு அதிகரிப்பு மற்றும் குடியேற்றம் காரணமாக ரஷ்யாவின் மக்கள் தொகை வெகு வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. உக்ரைன் போரினால் வெளிநாட்டு குடிமக்கள் அதிக அளவில் ரஷ்யாவில் இருந்து வெளியேறி விட்டனர்.
ரொக்க ஊக்கத்தொகை மற்றும் வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மூலம் குழந்தை பிறப்புஉயர்த்த ரஷ்ய அரசு முயற்சி கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த நடவடிக்கையால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது. ரஷ்ய அரசாங்கத்தின் கொள்கைகள் தொலைநோக்கு பார்வையற்றவை என்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறியதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தலைமையின்றி தள்ளாடும் பல்கலைக்கழகங்கள். கேள்விக்குறியாகும் மாணவர்கள்...