×
 

தடித்தனமாக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. டெல்லியை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்.!

உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்... என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (சமக்ரா சிக்‌ஷா அபியான் - எஸ்எஸ்ஏ) மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதாவது, இத்திட்டத்தில் 60 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது. 40 சதவீத நிதிக்கு மாநில அரசு பொறுப்பேற்கிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராத தமிழகம் உட்பட 3 மாநிலங்களுக்கு எஸ்எஸ்ஏ நிதியை மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் நிறுத்திவிட்டது. அந்த வகையில் எஸ்எஸ்ஏ திட்டத்தின் 2023-24 கல்வியாண்டின் 4-ம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் இந்த நிதியை வழங்கவில்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கிடையே வாராணசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்காதது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,"தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுத்து வருகிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது. இந்தியாவில் மற்ற மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும்போது தமிழகம் மட்டும் மறுப்பு தெரிவிப்பது சரியானதல்ல.

முதலில் கல்விக் கொள்கையை ஏற்பதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டது. பின்னர் அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. இது அவர்களுடைய தவறு. இதில் தமிழக அரசுதான் அரசியல் செய்து வருகிறது. அவர்களுக்குத் தமிழக வளர்ச்சியின் மீது அக்கறை இல்லை. தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளது. அதையேற்று தமிழ், ஆங்கிலத்துடன், கன்னடம் உட்பட ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது? தேசிய கல்விக் கொள்கை உள்ளூர் மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. எனில் தமிழ் மொழிக்கு எதிராக தமிழக அரசு இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியாது” என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில், "அவை இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் வருகின்றன என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?

மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!  "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்துக்கு நிதி கொடுக்க முடியாது.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share