தமிழகத்தில் மே மாதம் உள்ளாட்சி இடைத்தேர்தல்! சூடுபிடிக்கும் அரசியல் களம்...
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மே மாதம் உள்ளாட்சி இடைத் தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. மாநகராட்சி மேயர், துணை மேயர், வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள் அடங்கியது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல். இவை தவிர்த்து ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
இந்த நிலையில், நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் காலியாக உள்ள 448 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இடைத்தேர்தல், மே மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலும், 2021 ஆம் ஆண்டு மற்ற 9 மாவட்டங்களில் தேர்தலும் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: நிதிக்காக இனமானத்தை அடகு வைக்குற கொத்தடிமை நாங்க இல்ல.. முதல்வரின் ஃபயர் ஸ்பீச்..!
இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உயிரிழப்பு போன்ற காரணங்களால், தற்போது 448 பதவியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கான இடைத்தேர்தல் மே மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு, இடைக்கால தேர்தல்களை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் நான்கு வார்டு கவுன்சிலர்கள் உட்பட, 35 மாவட்டங்களில் உள்ள, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 133 பதவிகள் காலியாக உள்ளன என்று தெரிவித்துள்ளது.
மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய, ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், 315 காலியிடங்கள் உள்ளதாகவும் இப்பதவிகளுக்கான தேர்தலை, மே மாதம் நடத்துவதற்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தேசித்துள்ளது என்றும் கூறியுள்ளது. இதற்காக, மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க, தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியை தவிர வேற மொழி தெரியுமா? மக்களவையை அலறவிட்ட கலாநிதி வீராசாமி..!