தனியார் பள்ளியின் பித்தலாட்டம் ... கேள்விக்குறியான 19 மாணவர்களின் எதிர்காலம் ...!
நாளை பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ள நிலையில் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளி குறித்து வெளியாகியுள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிராம்பட்டினம் பிரைம் சிபிஎஸ்சி பள்ளி 8 ம் வகுப்புக்கே அங்கீகாரம் பெறவில்லை 19 மாணவர்களும் நாளை 10 ம் வகுப்பு தேர்வு எழுத முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாளை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாது என்பது உறுதியானது. மாணவர்களின் எதிர்காலம் போய்விட்டதாக கண்ணீர் மல்க பெற்றோர்கள் , மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் பிரைம் என்ற தனியார் சிபிஎஸ்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 19 மாணவர்கள் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து வந்த நிலையில், அவர்களுக்கு நாளை தேர்வு தொடங்க இருந்தது. ஆனால் இதுவரை ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை கேட்டும் ஹால்டிக்கெட் வந்துவிடும் என பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை, எனவே தனி தேர்வளராக மாணவர்களை தேர்வு எழுத வைக்க உள்ளதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தனி தேர்வராக தேர்வு எழுதக்கூடாது என்றும், மாணவர்கள் நாளை தேர்வு எழுத வேண்டும் என்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுடன் காத்துக் கிடந்தனர்.
இதையும் படிங்க: ஒரே ஒரு இமெயில்... விறுவிறுவென தனியார் பள்ளி முன்பு குவிந்த பெற்றோர்கள்... மதுரையில் உச்சகட்ட பரபரப்பு!
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கும்பகோணத்தில் நடைபெற்று வரும் வேளாண் பட்ஜெட் கருத்து கேட்கும் கூட்டத்தில் இருப்பதால், மாவட்ட DEO, CEO அதிகாரிகளுடன், மாணவர்களின் பெற்றோர்கள் - பள்ளியின் தாளாளர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் தான் அந்த பள்ளிக்கு எட்டாம் வகுப்பிற்கே அங்கீகாரம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து நாளை நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 19 மாணவர்களும் எழுத முடியாது என்பது உறுதியாகிவிட்டது.
மேலும், வேறொரு பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வாங்கி National institute of Open School என்ற திட்டத்தில் வரும் மார்ச் மாதம் விண்ணப்பம் செய்து ஜூன் மாதம் தேர்வு எழுத முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக பெற்றோர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.இந்நிலையில் கடந்த வருடம் இந்த பள்ளியில் 15 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த மாணவர்கள் தேர்வு குறித்து தற்போது அச்சம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: எலான் மஸ்க் அழைக்கிறார்! பள்ளியும், படிப்பும் முக்கியமல்லையாம்! இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு...