பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ஒயின் ஷாப்.. து.முதல்வரிடம் மாணவிகள் புகார்.. ஸ்பாட்டிலேயே உதயநிதி பிறப்பித்த உத்தரவு..!
திருவாரூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுபான கடையால் பெண்கள், மாணவிகள் பாதிக்கப்படுவதாக மாணவிகள் மனு அளித்த உடனேயே, மதுபான கடையை மூடச்சொல்லி துணை முதல்வர் உதயநிதி உத்தரவிட்டது அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
மதுபான கடைகளால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெண்களே அதிகம் பாதிப்புள்ளாகின்றனர். அதனால் தான் பெண்கள், சிறுவர்கள் அதிகம் தென்படும் பொது இடங்களில் மதுபான கடைகள் அமைக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே மதுபான கடைகள் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தள்ளியே அமைக்கப்பட வேண்டும். பேருந்து நிறுத்தம், கோயில், பள்ளிக்கூடம் போன்ற பொது இடங்களுக்கு அருகில் அமைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் இவ்வாறான பொது இடங்களின் அருகில் அமைக்கப்படும் மதுபான கடைகளில் மது குடிப்போர், போதையில் அப்பகுதியில் செல்வோரிடம் தகராறில் ஈடுபட வாய்ப்புள்ளது.
மேலும், இவ்வாறு மது குடிக்கும் மக்களை பார்த்து பழகும் சிறுவர்களும் எதிர்காலத்தில் இதேபோல உருமாற வாய்ப்புள்ளது என்பதால் இதனை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகளையில் அவற்றை அகற்ற வேண்டிய நடவடிக்கைகளை அதிகாரிகள் கையில் எடுப்பர். இதேபோல் திருவாரூரில் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த மதுபான கடையை அகற்றக்கோரி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவிகள் மனு அளித்துள்ளனர். மனுவை வாங்கி படித்து பார்த்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அந்த மதுபான கடையை உடனே அகற்ற உத்தரவிட்டது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சிக்கல்களில் இருந்து தப்பித்தார் உதயநிதி... உச்சநீதிமன்ற உத்தரவால் நிம்மதி..!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் குடவாசல் ஊராட்சிக்குட்பட்ட பூந்தோட்டத்தில் இருந்து நாச்சியார் கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் மருதவஞ்சேரி பேருந்து நிறுத்தம் உள்ளது. அந்த பேருந்து நிறுத்ததிற்கு அருகே அரசு மதுபான கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த அரசு மதுபான கடையால் பள்ளி செல்லும் மாணவர்கள், மாணவிகள். பேருந்து நிறுத்தம் வரும் பெண்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டோர் பாதிப்பு அடைந்தனர். பலர் குடித்து விட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்ததால் இரவு நேரங்களில் பெண்கள் அந்த பேருந்து நிறுத்தத்திற்கே வருவதற்கு பயம் கொண்டனர். வீட்டில் உள்ள சிறுவர்களை அப்பகுதிக்கு அனுப்ப பெற்றோர் அஞ்சினர். இதுபோல் பலருக்கு இந்த கடையால் இடையூறு ஏற்பட்டு வந்தது.
இதன் காரணமாக நீண்ட நாட்களாகவே, இந்த அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களை சந்தித்து குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். அதன்பின் அவர், மருதவாஞ்சேரியில் மொழிப்போர் தியாகி சாரங்கபாணி இல்லத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக காரில் சென்றார். அப்போது மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் இந்த டாஸ்மார்க் கடையை அகற்றக்கோரி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், படித்துப்பார்த்தார். எதற்காக இவ்வாறு மதுபான கடை பொது இடத்தில் உள்ளது என அதிகாரிகளை கடிந்தார். உடனடியாக கடையை மூட உத்தரவிட்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ இடமும் இது குறித்து தெரிவித்தார். உடனே மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மதுபான கடையை அகற்ற உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவின் பேரில் டாஸ்மாக் கடையை அதிகாரிகள் அகற்றி விட்டனர். மனு கொடுத்த உடனேயே அதற்கு தீர்வு காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கை வைத்த ED.! பகீர் கிளப்பும் தில்லாலங்கடி: கூண்டோடு சிக்கும் திமுக புள்ளிகள்..!