தவெக-வில் உட்கட்சி பூசல்... தாடி பாலாஜி சொல்வது என்ன..?
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து தாடி பாலாஜி வைத்த குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதை தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. கட்சி ஆரம்பித்த பிறகு பரந்தூருக்கு சென்றதைத் தவிர விஜய் பெரிய அளவில் வேறு எதும் செய்யாததால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். இது பேசுபொருளாக மாறியது.
இருந்தப்போதிலு கட்சி தொடங்கிய முதல் ஆண்டில் விஜய் பெரிய அளவில் அரசியலில் ஆக்டிவாக இல்லை என்ற குற்றச்சாட்டு இப்போதுவரை பரவலாக முன் வைக்கப்படுகிறது. மேலும் அவர் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தான் நடக்கிறது. கட்சி தொடங்கியதில் இருந்தே, விஜய்க்கு அடுத்து, புஸ்ஸி ஆனந்த் தான் கட்சியின் சார்பில் பல நிகழ்வுகளில் கலந்துக்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: மோடிஜி... தமிழ்நாடுன்னா ஏன் ஜி அலர்ஜி?... மத்திய அரசையும் விட்டு வைக்காத விஜய்...!
தமிழக வெற்றி கழகம் தொடங்கிய போது கட்சியில் பல திரைப்பிரபலங்கள் இணந்தனர். அவர்களின் ஒருவர் தான் தாடி பாலாஜி. இவர் விஜய் மீது இருக்கும் அதீத அன்பினால், விஜய்யின் முகத்தை தனது நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டார். இந்த நிலையில் நடிகரும் தவெகவைச் சேர்ந்த வருமான தாடி பாலாஜி புஸ்ஸி ஆனந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுக்குறித்து அவர் பேசுகையில், புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் தொடக்கத்திலிருந்தே பயணித்துக் கொண்டிருக்கிறார் தான்.
அதே நேரத்தில் தன்னை தாண்டி யாரும் விஜய்யை பார்த்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். ஒரு தொண்டன் தனது மனதில் உள்ள குறையை தலைவனிடம் கூற வேண்டும். அப்படி சொல்லும் போதுதான், கட்சியின் நிலைமை என்ன, தொண்டனின் மனநிலை என்ன என்பது கட்சியின் தலைவருக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
தாடி பாலாஜியின் இந்த குற்றச்சாட்டு, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது புஸ்ஸி ஆனந்த் மீதான குற்றச்சாட்டாக மட்டுமில்லாமல் கட்சியின் மீதும் கட்சி தலைவரான விஜய் மீதும் குற்றச்சாட்டு வைப்பது போல் உள்ளதாக பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: எதிர்வரும் தேர்தலில் TVK - DMK இடையே தான் போட்டி.. பொதுக்குழு மேடையில் வெளுத்து வாங்கிய விஜய்..!