×
 

பாஜக வெற்றிக்கு பின் உள்ள தேர்தல் அறிக்கை...தமிழக அரசியல் கட்சிகள் கற்க வேண்டிய பாடம் 

டெல்லி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு பின்னால் இந்தியா கூட்டணி பிளவுபட்டது மட்டுமல்ல பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளும் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதை தமிழக அரசியல் கட்சிகள் முக்கியமாக கவனிக்க வேண்டும் என்கிற கருத்தும் உள்ளது

 2015 ஆம் ஆண்டு 67 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றியுடன் களம் கண்ட கெஜ்ரிவால், பாஜக ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். 10 ஆண்டுகளாக டெல்லியில் என்னென்ன தொல்லைகள் தர முடியுமோ அத்தனையும் கொடுத்து பார்த்தும் பாஜகவால் ஆம் ஆத்மியை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் கெஜ்ரிவால் மக்களின் நம்பிக்கையை பெற முடியாத அளவிற்கு மதுபான ஊழல் வழக்கிலும், ஆடம்பர வாழ்க்கையில் கவனம் செலுத்தியதால் டெல்லி மக்கள் தற்போது அவரை புறக்கணிப்புள்ளனர்.

ஆம் ஆத்மி இந்த தேர்தலில் 10% வாக்குகளை இழந்துள்ளது. அதே நேரம் ஆட்சியை பிடிக்கும் பாஜக 7 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. பாஜகவும் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் குறைந்தபட்சம் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் தோல்வியை யாவது தவிர்த்து இருக்கலாம். இவ்வளவு காரணங்கள் இருந்தாலும் பாஜக ஆட்சி அமைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணமாக இருந்தது அதன் தேர்தல் வாக்குறுதி என அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். காரணம் பாஜக இம்முறை விளிம்பு நிலை மக்கள், மத்திய தர மக்களுடைய மனதை கவரும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது,

இதையும் படிங்க: இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சும்மாவா.? டெல்லி தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளிவிட்ட பாஜக!

பாஜக பக்கம் மக்களை நகர வைத்ததற்கு முக்கிய காரணம் என்கின்றனர். அதில் முதல் காரணமாக சொல்வது வருமான வரி வரம்பு ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டது என்கின்றனர். ஒரு லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்கள் வருமான வரிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட விதம் டெல்லியில் உள்ள மத்திய தர வர்க்கத்தினர், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது அதனால் பாஜகவிற்கு வாக்களிக்கும் வாக்காளர் எண்ணிக்கை கூடியது என்று சொல்கின்றனர்.

மறுபுறம் பாஜகவின் தேர்தல் அறிக்கை கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் பொதுமக்களை அதிகம் கவர்ந்துள்ளது இந்த வாக்குறுதி யுத்திகளை தமிழக அரசியல் கட்சிகள் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் பொதுமக்களை கவரும் விதத்தில் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் தேர்தலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைவது தமிழக அரசியலில் பலமுறை கண்டுள்ளோம். இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி அதற்கு முக்கிய காரணமாக கூறலாம், பாஜக அப்படியென்ன தேர்தல் வாக்குறுதி அளித்தது என்று பார்ப்போம்.

*ஏற்கனவே நடைமுறையில் உள்ள 16 ஸ்கிம்கள் எதையும் தொட மாட்டோம் அவை அப்படியே தொடரும் என்பது முதல் வாக்குறுதி. 
*அடுத்தது வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பெண்களுக்கு 2500 ரூபாய் என்பது முக்கியமான வாக்குறுதியாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 1000 ரூபாய் உரிமை தொகையாக் கொடுக்கின்றனர் 
* மூன்றாவதாக கர்ப்பிணிகளுக்கு 21,000 உதவித்தொகையும் 6 சத்துள்ள உணவுகள் அடங்கிய கிட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கர்ப்பிணிக்கான 16 வகையான பொருட்களை ஜெயலலிதா ஆட்சியில் கொடுத்ததை இங்கு நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
* அதேபோன்று வீட்டில் உபயோகப்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு ரூபாய் 500 மானியம் தரப்படும் என்பது இல்லத்தரசிகளை கவரும் முக்கியமான அறிவிப்பாகும். தமிழகத்தில் 100 ரூபாய் சிலிண்டருக்கு மானியமாக தருகிறேன் என்று கூறி அது நடைமுறையில் வராமல் போனது திமுக மேல் உள்ள குற்றச்சாட்டு ஆகும்.


* அதே போன்று தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகளுக்கு ஒரு சிலிண்டர் இலவசமாக அளிக்கப்படும் என்பது பெருத்த வரவேற்பை பெற்றது.
* மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்சூரன்ஸ் ஐந்து லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்காக கொடுக்கிறது. இதில் கூடுதலாக டெல்லி அரசு 5 லட்சம் போட்டு 10 லட்சமாக அதிகரித்து தரப்படும் 70 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும், வறுமை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் என்பது ஒரு முக்கியமான தேர்தல் வாக்குறுதி ஆகும்.
* தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதும் பின்னர் அது தரப்படுகிறது என்ற அரசு தரப்பில் கூறப்பட்டாலும் பலருக்கும் வராத நிலையில் தனியாக புகார் உள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதியாக 60 முதல் 70 வயது உள்ள முதியோர்களுக்கு 2500 ரூபாய் உதவித்தொகையும், 70 வயதுக்கு மேற்பட்டோர், விதவைகள், கைவிடப்பட்டோர் ஆகியோருக்கான உதவித்தொகை 2500 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தியும் வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் முக்கியமான ஒன்று.
*ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுக்கு வெற்றியை தேடித்தந்த ஐந்து ரூபாய்க்கு மீல்ஸ் திட்டத்தின் போலவே அடல் கேன்டீன் மூலம் ₹5 க்கு மீல்ஸ் வழங்கும் திட்டம்.
* சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், பள்ளிக்கல்வி உள்ளிட்ட பிரச்சினைகளில் எது வந்தாலும் உடனடியாக தீர்க்கப்படும். இவைகளில் வரும் பிரச்சினைகளை மற்ற மாநிலங்களை காரணம் காட்டி இந்த அரசு செயல்படாது என்கின்ற அறிவிப்பு.
* ஏழை மாணவர்களுக்கு எல்கேஜி முதல் பட்ட மேற்படிப்பு வரை கல்வி இலவசம் என்கின்ற அறிவிப்பு.
* போட்டி தேர்வில் பங்கேற்கும் டெல்லியை சேர்ந்த மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, இரண்டு தேர்வுகளுக்கு தேர்வு மையங்களுக்கு செல்லும் பயணத் தொகையும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு
* மின் கட்டணத்தில் 200 யூனிட் வரை இலவசம் என்கின்ற அறிவிப்பு.
* பத்தாவது முடித்த பட்டியலின மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொழில் கல்வி பயில என்கின்ற அறிவிப்பு.
 * முறைசாரா தொழிலாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டு திட்டமும் ஐந்து லட்ச ரூபாய் விபத்து காப்பீட்டு திட்டமும் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கான உயர்கல்விக்கு உதவி தொகையும், ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்களுக்கு மானியமும் வழங்கப்படும் என்கின்ற அறிவிப்பு அடுத்த வரவேற்பை பெற்றுள்ளது.
* இதேபோன்று வீட்டு வேலை செய்யும் பெண்கள் பிரசவகால விடுப்பாக ஆறு மாத காலத்திற்கு உதவி தொகையுடன் வழங்கப்படும் என்ற திட்டமும், பிரதமருக்கான விவசாயிகள் நிதி 6000 ரூபாயில் இருந்து  டெல்லியில் உள்ள விவசாயிகளுக்கு 9 ஆயிரம் ரூபாய் உயர்த்தி தருவோம் என்கின்ற அறிவிப்பும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதேபோன்று ஆம் ஆத்மி தெரிவித்த முக்கிய அறிவிப்பு தேர்தல் வாக்குறுதி.
*இதுவரை ஏற்றப்பட்ட தண்ணீர் பில் உள்ளிட்ட முக்கிய கட்டணங்களை திரும்ப பெறுவோம் என்கின்ற அறிவிப்பு.
* பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் மெட்ரோவில் செல்ல 50% கட்ட குறைப்பு கூடிய டிக்கெட் என்கின்ற அறிவிப்பும் முக்கியமாக பார்க்க முடிகிறது.


 அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் பாஜகவின் வெற்றிகரமான தேர்தல் அறிக்கையும், ஆம் ஆத்மியின்  தேர்தல் அறிக்கையில் உள்ள ஏற்றப்பட்ட மின் கட்டணம், குடிநீர் கட்டணங்களை திரும்ப பெறுவோம் என்கின்ற வாக்குறுதியும் மெட்ரோ ரயில் செல்ல 50% கட்டண குறைப்பு மாணவர்களுக்கு என்கின்ற அறிவிப்பும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக திமுக அரசு மேல் கோபத்தில் உள்ளனர். அதேபோன்று மெட்ரோ ரயில் கட்டணம் அதிக அளவில் உள்ளதால் மாணவர்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லை. சென்னையில் பெரும்பாலான பகுதிகளை மெட்ரோ ரயில் இணைக்கிறது. மெட்ரோவில் செல்ல 50% இலவச டிக்கெட் கட்டண குறைப்பு என்கின்ற அறிவிப்பு சென்னை வாக்காளர்களை கவரும் என்பதில் மாற்றமில்லை.
அரசியல் கட்சிகள் முக்கியமாக வளருகின்ற கட்சியான தவெக இதுபோன்ற கோரிக்கைகளை கவனத்தில் கொள்வது நல்லது என்று அரசியல் விமர்சகர்கல் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: காங்கிரஸூம் ஆம் ஆத்மியும் ஒன்னா சேர்ந்திருந்தா இப்படி நடந்திருக்குமா..? டெல்லி தேர்தல் முடிவால் நொந்துபோன திருமாவளவன்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share