லெப்டில் கைபோட்டு ரைட்டில் திரும்பும் திருமா..! டாஸ்மாக் ஊழல் பாஜக போராட்டத்திற்கு ஆதரவு..!
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மது ஒழிப்பு கொள்கையில் திமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
'டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்' என விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்திய பாஜக தலைவர்கள் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ''தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை குறித்து மாண்புமிகு அமைச்சரை சந்தித்து முறையிட இருக்கிறோம். தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். வருகிற இரண்டு வாரங்களில் பிரதமர் இந்த மாத கடைசியில் இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து அரசின் கவனத்திற்கு நாங்கள் முறையிட இருக்கிறோம். சட்டம் -ஒழுங்கு என்ற அடிப்படையில் காவல்துறை பாஜகவினரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம். ஆனால், இந்தப் போராட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். மதுபானம் முற்றாக தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். கடைகள் மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
இதையும் படிங்க: விஜய் பின்னால் திரளும் இளம் சிறுத்தைகள்..? ஓரிரு சீட்டுக்காக 'உதறித் தள்ளும்' திருமாவளவன்..?
இந்த நிலைப்பாட்டுக்காக குரல் கொடுக்கக் கூடிய யாராக இருந்தாலும், அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அரசுக்கு நெருக்கடி கொடுக்கிற உத்தியாக இதை கையாள நினைத்தால் அவர்கள் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.
பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் மது ஒழிப்பு கொள்கையை அவர்கள் நடைமுறைப் படுத்துகிறார்களா? என்ற கேள்வியும் இன்னொருபுறம் எழுகிறது.பாஜக ஆளக்கூடிய மாநிலங்களும் அங்கு பாஜக மது ஒழிப்பை முன்னிறுத்தினால் அதை நாம் முழு மனதோடு வரவேற்கலாம், பாராட்டலாம்.
நாங்கள் கூட்டணி கட்சியாக இருந்தாலும், தோழமைக் கட்சியாக இருந்தாலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி மது ஒழிப்பு கொள்கையில் திமுக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள்'' என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரு நடிகர் தேர்தல்ல கூட நிக்கல, ஆனால் அவர் தான் அடுத்த முதல்வராம் - விஜயை டைரக்ட் அட்டாக் செய்த திருமா!