ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நடைபெற்ற விளவங்கோடு, விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அபார வெற்றி பெற்றது. அதே முனைப்போடு ஈரோடு கிழக்கை வெல்ல திமுக தீயாய் வேலை செய்து வருகிறது.

இதனிடையே, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிருவார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்த நிலையில், அவரது தொண்டர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலால் வளர்ந்த கட்சி அதிமுக.. இன்று இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறதா?
இதனிடையே வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, கட்சி கொடியை ஏந்திய படி, சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பு வழியாக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். இதற்கு முன்னதாக, சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் தமிழர் உரிமைகளை வென்றெடுப்பதாக உறுதி ஏற்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முன் அனுமதி பெறாமல் பேரணி செல்லக்கூடாது என நாம் தமிழர் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீதாலட்சுமி, திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது, அதனால் தான் வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக செல்வதைக் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திமுகவா, நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமியா என பார்த்துக்கொள்ளலாம் என்றார். தொடர்ந்து, ஆவேசத்துடன் கையில் நாம் தமிழர் கொடியைக் ஏந்திய படி தனியாளாக வேட்புமனு தாக்கல் செய்ய நடந்து சென்றார். அப்போது வழியில் இருந்த கடைக்காரர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியின் வேட்புமனுவை ஈரோடு மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மனிஷ் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டார். தேர்தலில் போட்டியிட விரும்பும் சின்னமாக மைக் சின்னத்தை கேட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சீதாலட்சுமி எந்த சின்னத்தையும் கேட்கவில்லை என்றும், மாலையில் தான் சின்னம் முடிவாகும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் அறிவிப்பின் பின்னணி என்ன?