பாஜகவை நம்பி வந்த பிரபலங்கள் பலரும் ஆரம்பத்தில் தனக்கு ஏதாவது முக்கிய பதவி கிடைக்கும் என்பதால் ஆஹா, ஓஹோ என புகழுவதும், பதவி கிடைக்கவில்லை என்றால் அதிப்ருதியை வெளிக்காட்டுவதும் வழக்கமானது. அந்த வரிசையில் காயத்ரி ரகுராம், கெளதமி என நீண்ட பட்டியலே உள்ளது. சமீபத்தில் இந்த பட்டியலில் இணைந்திருக்கும் முக்கிய பிரபலம் நடிகர் சரத்குமார். நள்ளிரவில் உதித்த திடீர் யோசனையால் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார். இதனையடுத்து தனக்கு தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்போ அல்லது மத்தியில் முக்கிய பதவியோ கிடைக்கும் என சரத்குமார் எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பி வரும் பாஜக மாநில தலைவர் பதவிக்கு கூட அவர் கணக்கு போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று வரை எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படாததால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுக்காகவா? என் கட்சியைக் கொண்டு வந்து பாஜகவில் இணைந்தேன் என நெருக்கமானவர்களிடம் சரத்குமார் வாய்விட்டு புலம்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது விளவங்கோடு எம்.எல்.ஏ. பதவியை தூக்கி வீசிவிட்டு, விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை எண்ணி வருத்தப்பட்டு வருகிறாராம்.
இதையும் படிங்க: ‘வக்ஃபு திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்’.. காங்கிரஸ் கடும் வேதனை..!

சமீபத்தில் ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் செங்குத்து பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் வைத்து பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பாம்பன் பால திறப்பு விழாக்களிலும் பங்கேற்றனர்.

தனக்கு பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கலைன்னு வருத்தத்தில இருக்காங்களாம் விஜயதாரணி. அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர், 2011-ஆம் ஆண்டு முதல் மூன்று முறை தொடர் எம்.எல்.ஏ என பல பொறுப்புகளில் இருந்த விஜயதரணி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

விளவங்கோடு சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்த போதே தனக்கு காங்கிரஸ் கட்சியில் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டினார். இதனையடுத்து பதவியைக் கூட உதறி எறிந்துவிட்டு, விஜயதாரணி பாஜகவில் இணைந்த போது மத்திய அமைச்சர் ஆகப்போகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் தற்போது பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அழைப்புக்கூட தராமல் அவமதிக்கிறார்கள் என வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்... அதிர்ச்சியில் உறைந்த கும்பகோணம்...!