தேசிய கல்வி கொள்கை, தமிழகத்துக்கு கல்வி நிதி மறுப்பு, மும்மொழி கொள்கை, இந்தி எழுத்துகள் அழிப்பு என்று திமுக - பாஜக இடையே பரஸ்பர குற்றச்சாட்டுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் நாராயணன் திருப்பதி ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "1967ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது தமிழகத்தில் ஒரு பள்ளியில்கூட 'ஹிந்தி' கற்பிக்கப்படவில்லை. 1969ல் திமுக ஆட்சியில்தான் முதல் முதலாக சென்னையில் சிபிஎஸ்இ பள்ளி துவங்கப்பட்டது. சிபிஎஸ்இ பள்ளி துவங்குவதற்கு மாநில அரசின் அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் டில்லி, ஹரியானாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சிபிஎஸ்இ பள்ளிகள் இருப்பது தமிழ் நாட்டில் தான் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு வரை 1625 பள்ளிகள் தமிழகத்தில் இருந்தன என்பதும் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மாணவர்கள் மூன்றாவது மொழியை கற்று கொண்டிருக்கிறார்கள் என்பதும் தமிழக முதலமைச்சருக்கு தெரியுமா? தெரியாதா? தமிழக மக்களின் விருப்பத்தின் பேரிலேயே குழந்தைகள் மூன்றாவது மொழியை (ஹிந்தி உட்பட) பயில்கிறார்கள் என்பதோடு, இந்தப் பள்ளிகளை நடத்துபவர்கள் அதிக உற்சாகத்தோடு மூன்றாவது மொழியைக் கற்றுக்கொடுக்கிறார்கள். 2010ஆம் ஆண்டுக்கு பிறகு, அதாவது தி மு க ஆட்சியில்தான் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆர்வத்தோடு இணைத்தனர் என்பது கண்கூடு.
அன்றைய திமுக அரசின் தவறான கல்விக் கொள்கையினால், பாடத்திட்டத்தினால்தான் பெற்றோர்கள், மாநில கல்வி திட்டத்திலிருந்து தங்கள் குழந்தைகளை சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாற்றினர் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதாவது, மும்மொழி கல்வியைப் பெற்றோர்கள் அதாவது தமிழக மக்களும், பெரும்பாலான பள்ளிகளை நடத்தும் தமிழக அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டதால்தான் நாட்டிலேயே மூன்றாவது அதிகமான சிபிஎஸ்இ பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. ஆனால், தமிழக அரசின் கொள்கை இருமொழிதான் என்று சொல்வது ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகம்.

இலவச உணவும்,இலவச சீருடையும் கொடுப்பதால் அவர்களுக்கு தரமான கல்வியை அளிக்க மறுப்பது சமூக நீதிக்கு எதிரானது. அரசின் கொள்கை என்பது அனைவருக்கும் சமமானது தானே? அது தானே சமூக நீதி? அரசு பள்ளிகளில் மூன்றாவது மொழி வந்துவிட்டால், தனியார் பள்ளிகளின் கல்வி வியாபாரம் பாதிக்கப்பட்டு விடும் என்று எண்ணுவதாலேயே ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி மறுக்கப்படுகிறது. மக்கள் இதை உணர்ந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் சுயநலத்தால், அவர்களின் வியாபாரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் கல்விக் கொள்கை என்ற பெயரில் நடைபெறும் கல்விக் கொள்ளையை அனுமதிக்க முடியாது.
முன்னேறிய மாநிலமான தமிழகத்தின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது. தேசிய கல்வி கொள்கையின் மூலமாக ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு விடிவு காலம் பிறக்க இருந்த நல்வாய்ப்பை திராவிட மாடல் திமுக அரசு தட்டி பறிப்பது எந்த விதத்தில் நியாயம்?" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சையை கிளப்பும் திமுக.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை சரமாரி அட்டாக்.!