எடப்பாடி பழனிசாமி இல்லாவிட்டால், இந்த இயக்கத்தை துரோகிகள் எதிரிகளிடம் அடமானம் வைத்து அழித்து இருப்பார்கள் என்று அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டங்களை அக்கட்சி நடத்தி வருகிறது. இக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில்
மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு ஐந்தாம் பகுதி கழகத்தின் சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெத்தானியபுரத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பங்கேற்று பேசினார். “வருகின்ற 2026-ல் சட்டமன்றத் தேர்தலில் ‘பூத்’ கமிட்டி நிர்வாகிகளாகிய நீங்கள்தான் கட்சியின் அஸ்திவாரமாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். பொதுச் செயலாளர் கே.பழனிசாமி இந்த இயக்கதுக்கு ராணுவத் தளபதியாக உள்ளார். நீங்கள் எல்லாம் ராணுவ சிப்பாய்கள். எனவே அதை உணர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு இந்த இயக்கம் மாபெரும் சோதனையைக் கண்டது. இன்றைக்கு பொதுச் செயலாளராக உள்ள கே.பழனிசாமி மட்டும் இல்லை என்றால் இந்த இயக்கத்தை துரோகிகள் எதிரிகளுக்கு துணைப் போய் அடமானம் வைத்து அழித்து இருப்பார்கள். இன்றைக்கு எடப்பாடி கே.பழனிசாமி மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி அதிமுகவை மாபெரும் வலிமையுள்ள இயக்கமாக உருவாக்கி உள்ளார்,” என்று பா. வளர்மதி பேசினார்.
இதையும் படிங்க: குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை... திமுகவை தோற்கடிக்க அதிமுகவுக்கு வழிகாட்டும் சைதை துரைசாமி
இதையும் படிங்க: “அதிமுக வேண்டாம்; அண்ணாமலை தான் வேணும்” - பாஜக தொண்டர்கள் பார்த்த உள்ளடி வேலை...!