அனைத்து மதங்களுக்கும் ஒரே மாதிரியான தனிநபர் சட்டங்கள் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவும் இருக்கிறது, எதி்ர்ப்பும் நிலவுகிறது.
திருமணம், விவாகரத்து, வாரிசு, லிவ் இன் ரிலேஷன்(திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்தல்) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உத்தரகாண்டின் பொது சிவில் சட்டம் ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளது. அனைத்து ஆண்கள், பெண்களுக்கும் திருமண வயது சீராக்கப்பட்டுள்ளது, விவாகரத்து எந்த அடிப்படையில் வாங்கலாம், முறைகள் குறித்தும், பலதர மணமான பாலிகாமி, ஹலாலா ஆகியவற்றையும் இந்தச் சட்டம் தடை செய்துள்ளது.

2022 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்குவந்தால் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என புஷ்கர் சிங் தாமி உறுதியளித்திருந்தார். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததைதயடுத்து, பொது சிவில் சட்டத்தின் வரைவு விதிகளை உருவாக்க முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 2.30 லட்சம் மக்களிடம் இருந்து கருத்துக்களும் பெறப்பட்டன. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில் “ உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்றிலிருந்து பொது சிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அனைத்து உரிமைகளும் வழங்கப்படும், சட்டத்தின் முன் அனைவரும் சமம், அனைத்து மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் சமமான உரிமைகள் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் பொது சிவில் சட்டம் தொடர்பான இணையதளத்தையும் முதல்வர் தாமி வெளியிட்டார். இந்த இணையதளத்தில் பொதுசிவில் சட்ட விதிகள், உரிமைகள், நோக்கம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன
அனைத்து மதங்களில் இருக்கும் தனிநபர் சட்டங்களை நீக்கி அனைவருக்கும் பொதுவான நிரந்தர சட்டங்களை உருவாக்குவதே பொது சிவில் சட்டமாகும். இந்த சட்டத்துக்கு எதிராக விமர்சனமும், எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது.
சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளான திருமணம், விவாகரத்து, பரம்பரை, லிவ் இன் ரிலேஷன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கான விதிகள் இந்த சட்டத்தில் உள்ளன.
740 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கை 2024, பிப்ரவரி 2ம் தேதி முதல்வர் தாமியிடம் குழுவினர் வழங்கினர். இந்த அறிக்கைக்கு பிப்ரவரி 4ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்து, 6ம் தேதி நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பிப்ரவரி 28ம் தேதி ஆளுநர் குர்மித் சிங் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார், மார்ச் 11ம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் இந்த சட்டத்தின் மீது கையொப்பமிட்டார்.
இந்த சட்டத்தை 2025ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. டேராடூனுக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

பொது சிவில் சட்டத்தின் கீழ் யார் வருவர்
உத்தரகாண்ட் அரசு கொண்டுவந்த பொது சிவில் சட்டத்தின் கீழ் மாநில மக்கள் அனைவரும் வருவார்கள், மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் உத்தரகாண்ட் மக்களுக்கும் இது பொருந்தும். எஸ்சி, எஸ்டி மற்றும் பாதுகாக்கப்பட்ட சமூக்தினருக்கு இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டத்துக்கான இணையதளம் இன்று பிற்பகல் 12.30மணியிலிருந்து செயல்படத் தொடங்கும், மக்களுக்கு அடுத்தவாரத்திலிருந்து செயல்படத்தொடங்கும். இந்த இணையதளம் வழியாக மக்கள் தங்கள் திருமணம், விவாகரத்து, பரம்பரை உரிமை, லிவ் இன் ரிலேஷன், அதை முடித்துக்கொள்ளுதலையும் பதிவு செய்யலாம். அனைத்து நடைமுறைகளையும் வீட்டில் இருந்தவாறு செல்போனிலேயே செய்ய முடியும் தங்கள் விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
பொது சிவில் சட்டத்தின் கீழ் ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு 18ஆகவும் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. அனைத்து சமூகத்திலு்ம பலதாரமணம், நிக்கா ஹலாலா ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், சடங்குகள் நடத்த, சட்டப்படி பதிவு செய்ய வேண்டும், 60 நாட்களுக்கு முன்பாகவே பதிவு செய்ய வேண்டும்.
2010 மார்ச் 26ம் தேதிக்கு முன்பாக திருமணம் நடந்திருந்தால் அல்லது உத்தரகாண்ட் மாநிலத்துக்கு வெளியே நடந்திருந்தால், அந்த திருமணத்தை 180 நாட்களுக்குள் பொது சிவில் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இது கட்டாயமல்ல. விவாகரத்தைப் பொருத்தவரை கணவர் மனைவியிடமிருந்து விவாகரத்து உரிமை கோரும் நிலையில் மனைவியும் கணவரிடம் இருந்து உரிமை கோரி விவாகரத்து வழங்கலாம்.
இதையும் படிங்க: உத்தரகாண்ட்டில் இன்று அமலாகிறது பொது சிவில் சட்டம்....
இதையும் படிங்க: விரைவில் பொது சிவில் சட்டம்: விதிமுறைகளை ஏற்றது உத்தரகாண்ட் அமைச்சரவை...