அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதாகி இருக்கும் ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அடகு கடைகளில் வைத்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த நகைகள் அனைத்தும் ஞானசேகரனால் கொள்ளையடிக்கப்பட்டதாக பள்ளிக்கரணை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், ஞானசேகரன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு இந்த வழக்கில் ஞானசேகரன் அந்த மாணவியிடம் தவறாக நடந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: உச்ச நீதிமன்றத்தில்,சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கு : நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்!
இந்த நிலையில் வரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமையில் இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். குறிப்பாக ஞானசேகரன் மீது 20 க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. அது மட்டும் இன்றி பள்ளிக்கரணை பகுதியில் மட்டும் இவர் 250 சவரன் நகைகளுக்கும் மேல் கொள்ளையடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

அந்த அடிப்படையில் பள்ளிக்கரணை போலீசார் மூன்று நாட்கள் ஞானசேகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் நேற்று அவர் பயன்படுத்திய 'தார்' கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த 250 சவரன் கொள்ளையடித்த நகையை அவர் எந்தெந்த அடகு கடையில் அடகு வைத்திருக்கிறார் என்பது குறித்து அந்தந்த அடகு கடைகளுக்கு சென்று போலீசார் 100 சவரன் நகைகளை மீட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அத்தோடு கொள்ளையடித்த நகைகளை வைத்து தன்னுடைய மூன்று மனைவிகளுடன் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். மேலும், தன்னுடன் நெருக்கமாக இருந்த வேறு சில பெண்களிடமும் நகைகளை கொடுத்திருப்பதாக காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் இன்னும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வலிப்பு நாடகம் ஆடிய ஞானசேகரன் - உண்மையை கண்டுபிடித்த மருத்துவர்கள்