“அதிமுகவினரை பிரித்து பார்க்கவே முயற்சிக்கின்றனர். எப்போது பார்த்தாலும் அதிமுகவில் குழப்பம் வரவேண்டுமா என்ன? நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது. அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது. அதை முயற்சி செய்து பார்த்தால் மூக்குடைந்து போவார்கள்” என்று ஆலோசனை கூட்டங்களை செங்கோட்டையன் புறக்கணிப்பது குறித்த கேள்விக்கு நேற்று உற்சாகப் பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக சீனியர் தலைவர்கள் முயற்சியில் நடைபெற்ற செங்கோட்டையன் உடனான பேச்சுவார்த்தையில் அவர் சமாதானம் அடைந்ததால்தான் எடப்பாடி பழனிசாமி உற்சாகம் அடைந்து இதனை தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று செங்கோட்டையனே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொடர்ந்து 3 நாட்களாக சபாநாயகர் அறையில் வந்து காத்திருந்து, அதன் பிறகு சட்டப்பேரவைக்கு சென்று வந்தார். ஆனால், இன்று பேரவை தொடங்குவதற்கு 2 நிமிடங்கள் முன்பாகவே வந்து சட்டப்பேரவைக்குள் சென்று, சர்ச்சைக்கு மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்தார் செங்கோட்டையன்.
இதையும் படிங்க: யூடர்ன் போடும் பிரேமலதா விஜயகாந்த்.? திமுக கூட்டணியில் தேமுதிக.. அறிவாலயத்தில் திகுதிகு நகர்வுகள்.!?
அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் சீண்டி பார்த்து வந்த நிலையில், அதை எளிதில் எதிர்கொண்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனின் பாராமுகத்தால் கொஞ்சம் அரண்டுதான் போனார்.செங்கோட்டையன் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் அளித்த பதிலிலேயே அது அப்பட்டமாக வெளிப்பட்டது.

கடந்த பிப்ரவரி 9-ம் தேதி கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கான அழைப்பிதழ், பேனர்களில் மூத்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை எனக்கூறி, அவ்விழாவில் பங்கேற்பதை செங்கோட்டையன் தவிர்த்தார். அப்போது முதல் பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் செங்கோட்டையன் இருந்து வந்தார். அதிமுக அணிகள் ஒருங்கிணைப்புக்கு பழனிசாமி கடைசி வரை பச்சைக்கொடி காட்டாமல் இருப்பதும், செங்கோட்டையனின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கும் என அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி.24-ம் தேதி நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அண்மையில் நடைபெற்ற மகளிர் தின விழா ஆகியவற்றையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமண விழாவிலும், எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாகவே நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்றுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரை எதிர்கொள்வது தொடர்பான பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தையும், அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்தார். பழனிசாமி பேட்டி கொடுக்க வரும்போதும், உடன் வரவில்லை. அதிமுக அறையில் அமர்வதை தவிர்த்து, பேரவைத் தலைவர் அப்பாவு அறையில் அமர்ந்திருந்தார். நேற்று, அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் பேரவையில் கொண்டுவர இருந்த நிலையில், அது தொடர்பான அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. தொடர்ந்து செங்கோட்டையன், தன்னை சந்திக்க மறுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. கட்சியில் விரிசலா? எனவும் மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, "கட்சி தலைவர்களுக்குள் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது வழக்கமானது. பேச்சுவார்த்தைக்கு பிறகு செங்கோட்டையன் சமாதானம் அடைந்துள்ளார். இனி, எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன் இடையே எந்த கருத்து வேறுபாடும் இருக்காது. இனி அனைவரின் இலக்கும் 2026-ல் ஆட்சியை பிடிப்பது தான்" என்று அடித்துக் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே அதிமுக ஆட்சி.. இபிஎஸ்ஸை விரட்டும் ஓபிஎஸ்..!!