மனிதனின் முகத்திற்கு மேலும் அழகு சேர்ப்பதே சிகை அலங்காரம் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தலைமுடியை ஸ்டைலாக கோதி விடுவது போல் தாங்களும் செய்து பார்க்க வேண்டும் என்பது தான் இளைஞர்கள் பலரின் கனவாக இருக்கும். ஆனால் சிறுவயதிலேயே ஏற்படும் முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் போன்ற பிரச்னைகளால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்கள் மட்டுமல்லாமல் இளம் பெண்களும் சரியான அடர்த்தியில் முடி வளர்ச்சி இல்லாமல் சிரமப்படுகின்றனர். சிலருக்கு வயதாக வயதாக முடி அடர்த்தி மட்டுமல்லாமல் நீளமும் குறைந்து போவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் தான் விக் எனப்படும் செயற்கை முடி மனிதர்களுக்கு பெரு உதவி அளித்து வருகிறது.

வழுக்கை விழுந்தவர்கள் மட்டுமல்லாமல், வித விதமான சிகை அலங்காரத்தை விரும்புவர்களும் இதுபோன்ற விக்கை அதிகம் விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய பெண்களின் தலைமுடிக்கு தனி மவுசே உள்ளது. நம் பெண்கள் வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, சீயக்காய் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி தலைமுடியை பட்டுபோல் பராமரிக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக, தலைமுறை தலைமுறையாகவே நமது பெண்களின் தலைமுடிக்கு ஜீன் மூலம் ஊட்டச்சத்து கடத்தப்பட்டு வருகிறது. இதனாலேயே வெளிநாடுகளில் இந்திய பெண்களின் தலைமுடிக்கு தனி கிராக்கி இருப்பதாக கூறுகின்றனர் ஏற்றுமதியாளர்கள். இந்நிலையில் பெங்களூருவில் வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான தலைமுடியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தமிழ் நாடு- கேரளாவை பாஜகவின் வசமாக்கத் திட்டம்..! ஆர்.எஸ்.எஸ் உருவாக்கும் புதிய சூத்திரம் ..!

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடரமணா. வயது 73. தலைமுடிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். தலைமுடிகளை சேமித்து வைக்க, லட்சுமிபுரம் அருகே சிறிய குடோன் ஒன்றும் வைத்துள்ளார். கோயில்களில் காணிக்கையாக கிடைக்கும் முடி, சிலர் தாமக முன்வந்து கொடுக்கும் முடி என கிலோ கணக்கில் முடிகளை வாங்கி குவித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி இரவு கிடங்கின் இரும்புக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஆறு பேர், கிடங்கிற்குள் 27 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு இருந்த, தலைமுடிகளை திருடி உள்ளனர். அவர்கள் ஜீப்பில் எடுத்துச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து வெங்கடரமணா சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில், தலைமுடி திருடு போனது குறித்து வெங்கடரமணா கூறுகையில், வெளிநாடுகளில் நம்ம ஊர் தலைமுடிக்கு மவுசு அதிகமாக உள்ளது. தலைமுடியை பயன்படுத்தி விக் தயாரிக்கின்றனர். முதலில், எனக்கு ஹெப்பாலில் தான் குடோன் இருந்தது. 20 நாட்களுக்கு முன் தான் இங்கும் குடோன் திறந்தேன். 20 நாட்களுக்குள் நோட்டமிட்டு, குடோனில் இருந்து 830 கிலோ எடை கொண்ட தலை முடிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என சோகமாக கூறினார். திருடப்பட்ட தலைமுடியின் மதிப்பு வெளிநாட்டு சந்தைகளில் 80 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தலைமுடிகளை திருடி சென்றவர்கள் தெலுங்கில் பேசியதாகவும் கூறினார். மர்ம நபர்கள் தெலுங்கில் பேசியதை பக்கத்து கடையை சேர்ந்த ஒருவர் கவனித்து உள்ளார். அவர்கள் முடியை இங்கிருந்து எடுத்துச் செல்ல வந்தனர் என்று நினைத்துள்ளார். திருட வந்ததாக நினைக்கவில்லை என்றும் சொன்னார். இந்நிலையில் வெங்கட்ரமணாவின் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பெங்களூருவில் ஒரு கோடி மதிப்பிலான தலைமுடிகள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மனைவி நடத்தையில் சந்தேகம்.. கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் கைது.. இறுதிச்சடங்கில் நடந்த ட்வீஸ்ட்..!