டெல்லி சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே டெல்லி அரசியல்களம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தேதி அறிவிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து, தற்போது பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில், தோல்வி பயத்தில் கெஜ்ரிவால் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக, பாஜக கூறியிருந்தது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில், கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக, பாஜக தான் தோல்வி பயத்தில் கூறி வருகிறது. புதுடெல்லியில் மட்டுமே நான் போட்டியிடுகிறேன்"என்று உறுதியுடன் தெரிவித்தார்.

நேரடி போட்டி
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கெஜ்ரிவால், "டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இது 'இந்தியா கூட்டணி' விவகாரம் அல்ல"என்றார்.
இதையும் படிங்க: ‘இந்தியா கூட்டணி’ மக்களவைத் தேர்தலோடு முடிந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் வெளிப்படை
"ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு சதி நடக்கிறது. புதுடெல்லி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் இருந்து மொத்தமாக பாஜக விண்ணப்ப படிவங்களை புதிய வாக்காளர் சேர்க்கைக்காக தாக்கல் செய்து வருவதாக" ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
கெஜ்ரிவாலை எதிர்க்கும் "முக்கிய 'தலை'கள்"
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் புது டெல்லியில் மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜிரிவால், இந்த தேர்தலில் முக்கிய தலைவர்களுக்கு எதிராக மும்மனை போட்டியில் இருக்கிறார்.
முன்னாள் முதல்வர்கள் இருவரின் மகன்கள் கெஜ்ரிவாலுக்கு எதிராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஸ் வர்மா பாஜக வேட்பாளராகவும், மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் காங்கிரஸ் வேட்பாளராகவும் களம் காண்கிறார்கள்.

தனித்துப் போட்டி
பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை வழிநடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இதுவரை 48 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் பிப்ரவரி ஐந்தாம் தேதி தேதி வாக்குப் பதிவைதொடர்ந்து, எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
*
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம் - தேர்தல் ஆணையம் முடிவெடுக்கத் தடை..