2015 ஆம் ஆண்டு டெல்லியில் காலூன்றிய அரவிந்த் கேஜ்ரிவால் வித்தியாசமான அரசியலால் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவருக்கு யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசு பல தொல்லைகளை கொடுத்தது. யானை காதில் புகுந்த எறும்பாக பெரும் தொல்லை கொடுத்தார் கேஜ்ரிவால்.

மத்திய அரசை எதிர்த்தால் சிபிஐ, அமலாக்கத்துறை பாயும் என தெரிந்தும் மதுபான ஊழலில் சிக்கினார் கேஜ்ரிவால். முதலில் அவரது சகாக்களை தூக்கிய அமலாக்கத்துறை கேஜ்ரிவாலையும் தூக்கியது. அவரது இமேஜை சீர்குலைத்தது. இதற்கு கேஜ்ரிவாலும் ஒரு காரணம். அதே நேரம் கேஜ்ரிவால் மெல்ல மெல்ல தேசிய தலைவராக உருவெடுத்தார்.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்: அமலாக்கப் பிரிவு நடவடிக்கையலிருந்து தப்புவாரா?

ஆம் ஆத்மி தேசிய அரசியலில் காலூன்றியது. பஞ்சாப், குஜராத், ஹரியானா என கால்பதித்தது. இன்னும் பல மாநிலங்களில் ஆம் ஆத்மி உள்ளது. இந்த நேரத்தில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக அணி அமைக்க முயற்சித்தன. ஜனதா கட்சி, தேசிய முன்னணிக்கு அடுத்து இந்தியா கூட்டணி அமைந்தது. ஆனால் அதை உருவாக்கிய நிதிஷ்குமாரே பாஜக கூட்டணிக்கு போனார்.

இந்தியா கூட்டணி தலைவர்களின் ஒற்றுமையின்மையை பாஜக தெளிவாக பயன்படுத்தியது என்பதைவிட இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள இடதுசாரிகள், மம்தா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் சுயநல அரசியல் இந்தியா கூட்டணியின் வலுவை குறைத்தது. அதேபோல் இந்தியா கூட்டணியின் பிரதான தலைமை கட்சியான காங்கிரஸ் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததாக தெரியவில்லை.
ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தலில் தனது பெரியண்ணன் மனோபாவத்தை காட்டிய காங்கிரஸ் அதனால் தான் ஆட்சியமைக்கும் வாய்ப்பையே இழந்தது. அதேபோல் ஆம் ஆத்மியுடன் மக்களவை தேர்தலில் களம் கண்ட காங்கிரஸ் ஹரியானாவில் 5 மக்களவை தொகுதிகளை தனது கூட்டணி மூலம் வென்றது. பாஜக 44% வாக்கு சதவீதத்தை வைத்து 10 தொகுதிகளையும் வென்றபோது 2024 தேர்தலில் ஆம் ஆத்மியும் (4%) காங்கிரஸும் (42%) சேர்ந்து 46% பெற்றதன் மூலம் 5 மக்களவை தொகுதியை பெற்றது.

ஆனால் அடுத்த ஆண்டே வந்த சட்டமன்ற தேர்தலில் இக்கூட்டணி இருந்திருந்தால் ஆட்சியை பிடித்திருக்கும், அங்குதான் காங்கிரஸின் பெரியண்ணன் மனோபாவம் தலைதூக்கியது. ஆம் ஆத்மிக்கு உரிய தொகுதிகளை வழங்காததால் தனித்தனியாக போட்டியிட்டு .84% ல் ஆட்சியை தூக்கி பாஜகவுக்கு கொடுத்தது காங்கிரஸ். அதன் பின்னராவது திருந்தினார்களா என்றால் இல்லை.

டெல்லி அரசியலில் இதே மோதல் நீடித்தது. இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் கேஜ்ரிவாலை ஆதரிக்க, கேஜ்ரிவாலுக்கு கஷ்டம் வந்த போதெல்லாம் துணை நின்ற காங்கிரஸ் பாஜகவுடன் சேர்ந்து கேஜ்ரிவாலையும் ஒருசேர எதிர்த்தது. இது பாஜகவுக்கு வாய்ப்பாக அமைந்தது. இன்று தனித்தனியாக நின்று ஹரியானாபோல் ஆட்சியை தூக்கி பாஜகவுக்கு கொடுத்துள்ளனர்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வாங்கிய வாக்கு சதவீதம் 43.57%, காங்கிரஸ் வாங்கிய வாக்கு சதவீதம் 6.34% பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 45.56%. ஒன்றாக இருந்திருந்தால் காங்கிரஸுக்கும் இடம் கிடைத்திருக்கும் சொல்ல முடியாது ஆட்சியைக்கூட தக்க வைத்திருக்கலாம். இந்த நிகழ்வு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். 2026 சட்டமன்ற தேர்தலில் தவறான முடிவெடுத்தால் தோல்வி நிச்சயம்.
இதையும் படிங்க: ‘இந்தியா கூட்டணி’ மக்களவைத் தேர்தலோடு முடிந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் வெளிப்படை