+1 மாணவர் தாக்கப்பட்ட சம்பவம்.. ஏப். 2-க்குள் தூத்துக்குடி கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..!
+1 மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், ஏப்ரல் 2ம் தேதிக்குள் தூத்துக்குடி கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே ப்ளஸ் 1 மாணவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், இந்த வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 2 ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரத்தைச் சேர்ந்த மாணவர் தேவேந்திரராஜ் என்ற மாணவர் நேற்று முன்தினம் தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்ற போது, கெட்டியம்மாள்புரம் என்ற இடத்தின் அருகே பஸ்சை வழிமறித்து தேவேந்திரராஜை பஸ்சில் இருந்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
பலத்த காயம் அடைந்த தேவேந்திரராஜுக்கு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர் தேவேந்திரராஜை சிலர் சாதி ரீதியாக வன்கொடுமை செய்யும் நோக்கத்துடன் அரிவாளால் வெட்டி கொடுங்காயங்களை ஏற்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும், இந்த குற்ற செயலில் லட்சுமணன் என்ற வாலிபரும் மற்றும் 2 சிறுவர்களும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது எனத் தெரிவித்த ஆணையம், சிலரின் திட்டமிட்ட தூண்டுதலின் பேரில் இந்த குற்ற சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது என்பதால், இந்த குற்ற சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏப்ரல் 2ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ் படிக்க நம்பி வாங்க..! கூவி அழைக்கும் திமுக துரைமுருகனின் பள்ளி..! போட்டு பொளக்கும் பிஜேபி..!