×
 

10 ஆண்டுகளில் 17.50 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை துறந்தனர்

ஜெய்ராம் ரமேஷ் தாக்கு ரெய்டு ராஜ்ஜியத்தையும், வரித் தீவிரவாதத்தையும் ஒழிக்கும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்க வேண்டும், தொழில், வர்த்தகத்தை எளிதாக செய்யும் வகையிலும் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது, பிப்ரவரி 1ம் தேதி மத்திய  பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது, மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். ஜிஎஸ்டி வரியில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும், வரியை எளிமைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய உற்பத்தித் துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊதியத்தை உயர்த்தவும், மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவும் முழுமையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். 


ஜிஎஸ்டி வரியும், வருமான வரி விதிப்பும் மக்களையும், வரி செலுத்துவோர்களையும் குழப்பும் விதத்திலும், தண்டிக்கும் விதத்திலும், தன்னிச்சையாகவும் இருக்கக்கூடாது. இது வரி தீவிரவாதத்துக்கு இட்டுச் செல்கிறது. இந்த வரி தீவிரவாதம் தேசத்தின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகி, தொழில், வர்த்தகம் செய்வதில் சிக்கலான, சிரமமான சூழலை உருவாக்குகிறது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் உள்நாட்டில் தனியார் முதலீடு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இந்த தனியார் முதலீடு ஜிடிபி-யில் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைந்துவிட்டது.


இந்த மந்தமான முதலீடு, அதிக சொத்துமதிப்புள்ள தனிநபர் முதலீட்டாளர்களை வெளியேற வைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 17.50 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியுரிமை வாங்கியுள்ளனர்.
2022 முதல் 2025 வரை 21ஆயிரத்து 300 கோடீஸ்வரர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த மந்தமான நிலைக்கு 3 முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது குழப்பமான ஜிஎஸ்டி வரி முறை, இந்த வரியால் 100 வெவ்வேறு வரிமுறைகள் புதிதாக வந்துள்ளன. பன்மடங்கு வரிமுறையும், குழப்பமும் சேர்ந்து ஜிஎஸ்டி வரி ஏய்ப்புக்கு வழிவகுத்து ரூ.2.10 லட்சம் கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது, 2023ம் ஆண்டில் இருந்த மோசடியைவிட இருமடங்காகியுள்ளது. 18ஆயிரம் போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை, எங்கு செயல்படுகின்றன என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: ‘புதிய வருமானவரி மசோதா’ : பட்ஜெட் கூட்டத்தில் மத்திய அரசு அறிமுகம்? முக்கியத்துவம் என்ன?


2வதாக சீனாவிலிருந்து தொடர்ந்து இறக்குமதி அதிகரிப்பாகும். இதனால் வர்த்தகப் பற்றாக்குறை வரலாற்றில் இல்லாத அளவாக 8500 கோடி டாலராக 2023-24ம் ஆண்டில் அதிகரித்துள்ளது. இந்த இறக்குமதி அதிகரிப்பு இந்திய உற்பத்தித்துறையயும், தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் துறைகளையும் பாதித்துள்ளது. 3வது காரணம், பலவீனமான, மந்தமான நுகர்வு. மக்களின் ஊதியம் உயராமல் மந்தமாக இருப்பதால் நுகர்வு குறைந்துள்ளது. வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள்படி, வேளாண் தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் காங்கிஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 6.8% வளர்ச்சி அடைந்தது. ஆனால், மோடி அரசில் ஆண்டுக்கு 1.3% வளர்ச்சி குறைந்துள்ளது. 


தொழிலாளர் சர்வேயான பிஎல்எப்எஸ் கூறுகையில் 2017 முதல் 2022 வரையிலான உண்மையான சராசரி வருமானம் அனைத்து தொழிலாளர்களிடையேயும் தேக்கமடைந்துள்ளது. அது மாத ஊதியம் பெறுவோர், கூலித்தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோரின் வருமானமும் வளரவில்லை.
மத்திய அரசின் இந்த பிற்போக்குத்தனமான கொள்கையால், இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர். இந்த  குறைபாடுகளைக்  களைய, வரும்பட்ஜெட்டில் வரித் தீவிரவாதத்தையும், ரெய்டு ராஜ்ஜியத்தையும் ஒழிக்க வேண்டும், இந்திய உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,  மக்களின் ஊதியம், வாங்கும் சக்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மோடி அரசால் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து.. உதயநிதி பரபரப்பு பேச்சு..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share