மகாகும்பமேளாவில் புனித நீராட நாளையே கடைசிநாள்... 45 நாள் கொண்டாட்டம் நிறைவுக்கு வருகிறது....
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாகும்பமேளா நடைபெறுவது வழக்கம்.
உலக ஆன்மிக பக்தர்களை கவர்ந்து இழுத்து வந்த மகா கும்பமேளா நாளையுடன் நிறைவடைய உள்ளது. இதனால் நாளை கட்டுக்கடங்காத கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாகும்பமேளா நடைபெறுவது வழக்கம். மொத்தம் 45 நாட்களுக்கு இந்த கும்பமேளா நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 13-ந் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. நாளையுடன் (26/2/2025) நிறைவு பெற உள்ளது.
இந்த கும்பமேளாவுக்காக திரிவேணி சங்கமத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் 1,800 ஹெக்டேர் இடத்தில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள், 25 ஆயிரம் பொதுத் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை யோகி ஆதித்யநாத் அரசு செய்திருந்தது.
இதையும் படிங்க: கும்பமேளாவில் கிடைத்த ‘பன்றிகளுக்கு அழுக்கு... கழுகுகளுக்கு பிணங்கள்…’- யோகி ஆவேசம்..!
இதுவரை 60 கோடிக்கும் மேலான மக்கள் புனித நீராடி உள்ளதாக உத்தரப்பிரதேச அரசு புள்ளி விவரங்களை அடுக்குகிறது.
நாளை மகாசிவராத்திரி என்பதாலும், மகா கும்பமேளாவின் கடைசிநாள் என்பதாலும் முன்னெப்போதை விடவும் கூடுதல் பக்தர்கள் திரளுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. திரிவேணி சங்கமத்திற்கு அருகில் உள்ள அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரின் பேருந்து நிறுத்தங்கள், லாட்ஜ்கள், பயணிகள் கூடும் இடங்கள் என்று எல்லா இடத்திலும் துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் இந்தமுறை உயிர்பலி நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
புனித நீராடும் இடத்திற்கு இருசக்கர வாகனங்களில், பக்தர்களை அழைத்துச் செல்ல திடீர் இளைஞர் பட்டாளம் ஒன்று பிரயாக்ராஜில் உருவாகி உள்ளது. இந்த டூவீலர்கள் நகர் முழுவதும் குறுக்கும் மறுக்குமாக செல்வதால் அவர்களை கட்டுப்படுத்துவது கடும் சவாலாக உள்ளது. நாளைய தினம் ஏற்பட உள்ள கூடுதல் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், இந்த இருசக்கர கும்பல்களை கட்டுப்படுத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார் மகா கும்பமேளா சிறப்பு டிஐஜி வைபவ் கிருஷ்ணா.
இந்த மகா கும்பமேளாவை தவறவிட்டால் அடுத்த மகாகும்பமேளா 2,169-ம் ஆண்டுதான் நடைபெறும் என்பதை நினைவில் கொள்க. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது சாதாரண கும்பமேளா. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது மகா கும்பமேளா. நம் வாழ்நாளில் இத்தகைய அசாதாரண நிகழ்வுகளை பார்ப்பது அரிது என்பதால் திரிவேணி சங்கமத்தில் திரள்கிறது கூட்டம்.
இதையும் படிங்க: மகா கும்பமேளா: பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த பாவிகள்.. வெளிநாட்டு தொடர்பு அம்பலம்; பகீர் தகவல்கள்..!