ஜனவரி 21-ல் வானில் நடக்கப்போகும் அரிய நிகழ்வு...
அணிவகுத்து நிற்கப் போகும் ஆறு கோள்கள்...
நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது இந்த பிரபஞ்சம். அதன் ரகசியங்கள் பற்றி நாம் அறிந்து கொண்டது என்பது அணுவினும் அணுவாகும். எண்ணிலடங்கா பால்வீதிகள் நொடிதோறும் பிறந்தும், மறைந்தும் காணப்படும் அளவில்லா அற்புதம் இந்த இயற்கை. எத்தனையோ பால்வீதிகள், எத்தனையோ சூரியக் குடும்பங்கள், எத்தனையோ கிரகங்கள் பரந்து விரிந்திருக்கக் கூடும். நாம் அறிந்து கொண்டது அதிகபட்சம் நமது சூரியக்குடும்பம் பற்றி தான், அதுவும் ஓர் எல்லைவரை தான்.
அந்தவகையில் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினம் வசித்து வருகிறது. ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டும். மனிதர்கள் வசிக்கும் கோள் என்ற பார்வையில் இருந்து மாறுபட்டு மனிதன் உள்ளிட்ட பல உயிரினங்கள் வாழக்கூடிய கோள் என்ற நிலையில் சிந்திக்கும்போதுதான், குறைந்தபட்ச பொறுப்புகளோடு நாம் இயற்கையை அணுக முடியும்.
பூமியைப் போலவே சூரியனை சுற்றி வரும் கோள்களில் ஒருசிலவற்றை வெறும் கண்ணால் குறிப்பிட்ட நாட்களில் நம்மால் பார்க்க முடியும். பல கிரகங்களை தொலைநோக்கிக் கொண்டே பார்க்க இயலும். வெவ்வேறு சுற்றுவட்டப்பாதையில், வெவ்வேறு வேகத்தில் சுழலும் கோள்களை ஒரே அலைவரிசையில் காண்பது என்பது அரியவகை வானியல் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்.. மீண்டும் ஒரு தமிழர், இஸ்ரோ தலைவராகிறார்.
அப்படியான ஒரு மாயநிகழ்வு வருகிற 21-ந் தேதி வானில் நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வர உள்ளதாம். வருகிற 21-ந் தேதி தொடங்கி சில வாரங்களுக்கு இவை அப்படியாக வானில் சுழன்று வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வானம் தெளிவாக இருக்கும்பட்சத்தில் அவற்றை வெறும் கண்ணால் கூட பார்க்க முடியும் என்று சொல்கின்றனர்.
சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதை கிரகணம் என்கிறோம். 6 கோள்கள் அவ்வாறு ஒரே நேர்க்கோட்டில் வந்தால் அதனை என்னவென்று சொல்வது. கிரகங்களின் அணிவகுப்பு என அழைத்து மகிழ்வோம்..
இதையும் படிங்க: ‘இந்தியா கூட்டணி’ மக்களவைத் தேர்தலோடு முடிந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் வெளிப்படை