ஆட்டத்தை ஆரம்பித்த ஆதவ்...பிகே-விஜய் சந்திப்பின் பின்னனி என்ன?
ஆதவ் அர்ஜுனா சவாலான நிலையில் கட்சியில் பொறுப்பேற்றுள்ள நிலையில் பிகேவை அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைத்ததன் மூலம் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழக அரசியல் களம் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு பெரும்பாலும் வியூக வகுப்பாளர்களை நம்பியே நகர்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் பொழுதே அவருடைய வியூகத்தை தகப்பதற்காக சுனிலை ஸ்டாலின் அழைத்து வந்து திமுகவுக்கு செயல்பட வைத்தார். சுனில் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி ஊர் ஊராக சென்று சைக்கிள் ஓட்டி, டீக்கடையில் டீ குடித்து, கலர் கலரா டிரஸ் போட்டு பெரிய அளவில் 'நமக்கு நாமே' என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் ஜெயலலிதா மிக அழகாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி மூலம் தனக்கு வேண்டிய அரசியல் தலைவர்களை வைத்து திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருந்த கட்சிகளை வெளியில் வரவைத்து மக்கள் நலக்கூட்டணி அமைத்து திமுகவை தனிமைப்படுத்தி அதிமுகவை வெற்றி பெற வைத்தார்.
என்னதான் தொழில்முறை வியூக வகுப்பாளராக பலர் இருந்தாலும் அரசியலில் பல ஆண்டு களம் கண்டவர்கள் எப்போதும் அதை முறியடிப்பார்கள் என்பதற்கு சாட்சி 2016 தேர்தல். இந்த தேர்தலில் பெரு வெற்றி பெறுவோம் என்று நம்பிய ஸ்டாலின் அது கைகூடி வராமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சி நான்கு ஆண்டுகள் தொடர்ந்தது. அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் இயல்பாகவே தமிழக மக்களுக்கு அதிமுக ஆட்சியின் மீது ஒரு வெறுப்பு நிலவியது. இந்த நிலையில் திமுக மீண்டும் வியூக வகுப்பாளர் ஒருவரை தேடியது. அப்பொழுது திமுக உடன் பயணித்த ஆதவ் அர்ஜுனா மூலம் பிரசாந்த் கிஷோர் அழைத்துவரப்பட்டார். 2019 தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முழுமுதல் காரணம் அப்போது நிலவிய அரசியல் சூழல் முற்றிலும் அதிமுகவுக்கு பாஜகவிற்கு எதிரான ஒரு மனநிலையில் மக்கள் இருந்ததும், மக்கள் நல கூட்டணியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து திமுக கூட்டணிக்குள் பெரும்பாலான கட்சிகள் உள்ளே வந்ததும் முக்கிய காரணமாக அமைந்தது..
இதையும் படிங்க: விஜயின் விறுவிறு வியூகம்… பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு… ஆடிப்போன திமுக- அதிமுக..!
எப்படியும் வெல்வதற்கான வாய்ப்புகள் நிறைந்த நிலையில் பிகேயும் செயல் திட்டமும் சேர்ந்து 2019 தேர்தலில் திமுக கூட்டணி பெருவெற்றி பெற்றது. அதே வெற்றி 2021-லும் தொடர்ந்தது. திமுக கூட்டணி வருவதற்காக தோழமைக் கட்சிகளையே ஒரு கட்டுக்குள் நிறுத்திய திறமை பிரசாந்த் கிஷோரை சாரும். இதன் பின்னர் பிரசாந்த் கிஷோர் விலகிய நிலையில் பென் அமைப்பை ஆதவ் மூலம் சபரீசன் தொடங்கி அடுத்த கட்ட தேர்தலுக்கு நகர்த்த தொடங்கினார். இதன் பின்னர் ஆதவ் அர்ஜுனா கருத்து வேறுபாடு காரணமாக வெளியில் வந்து விசிகவில் இணைந்தார்.
பிரசாந்த் கிஷோர் தன்னுடைய ஐபேக்கை ஆந்திர தேர்தலுக்கு மாற்றினார். பின்னர் பிரசாந்த் கிஷோர் ஐ பேக்கிலிருந்து பிரிந்து ’ஷோ டைம்’ என்கிற நிறுவனத்தை நடத்திய ராபின் ஷர்மாவுடன் இணைந்தார். சசி உள்ளிட்ட இயக்குனர்களால் ’ஐபேக்’ தனியாக இயங்கியது. ராபின் ஷர்மா தலைமையிலான அணி சந்திரபாபு நாயுடு மகாராஷ்டிராவில் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டவர்களுக்கு வேலை செய்தது. அதன் பின்னர் அதிலிருந்து விலகிய பிகே பிஹாரில் தனி கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அத்துடன் பிகேவின் வியூக வகுப்பாளர் பயணம் நிறைவுற்றது. ஒரு அரசியல் தலைவராக பீகாரில் பிரசாந்த் கிஷோர் பயணிக்கிறார். 2025 இல் பிகார் தேர்தலில் அவரது முழு கவனமும் உள்ளது.
இந்நிலையில் விஜய் தவெகவை தொடங்க விசிகவில் இருந்த ஆதவ் அர்ஜுனா புத்தக வெளியீட்டு விழாவிற்கு விஜய்யை அழைக்க அதே விழாவில் திருமாவளவனின் கலந்து கொள்ள அழைத்த பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் திருமாவளவன் ஒதுங்க, அந்த விழாவில் விஜய்யும் ஆதவ்வும் திமுக அரசை விமர்சித்ததால் ஆதவ் அர்ஜுனா விசிகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விசிகவிலிருந்து விலகிய அவர் பின்னர் விஜய் அழைப்பின் பேரில் தவெகவில் இணைந்தார். ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைவதற்கு முன்பு தவெக புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இருவர் கைக்குள் அடக்கம் ஆக செயல்பட்டு வந்தது.
இந்த இருவரும் எவ்வித முன்னேற்றத்தையும் தராமல் கட்சியை அடுத்த கட்டத்திற்கும் நகர்த்தாமல் ஓராண்டாக ஒரு தேக்கத்துடன் கட்சியை நடத்தி வந்தது தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியிருந்தது. மற்ற கட்சிகளும் விமர்சனம் வைத்து வந்தனர். தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் என்ற பதவியில் இணைக்கப்பட்டார். என்னதான் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் என்றாலும் வியூக உத்திகளை ஏற்று ஜான் சொல்கிற படியும் புஸ்ஸி ஆனந்த் சொல்கிறபடி நடக்க வேண்டும் என்று அறிக்கை வெளியில் வந்தது.
ஆதவ் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்பதையும், ஏற்கனவே புஸ்ஸி ஆனந்தும், ஜான் ஆரோக்கியசாமியின் செயல்பாட்டால் தேக்கத்தில் இருக்கின்ற தவெகவை ஆதவ்வும் மாற்றி புதிதாக எந்த செயலையும் செய்ய முடியாது என்பதையும் இவர்கள் இருவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதையும் உணர்த்துவதாக இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென பிரசாந்த் கிஷோர் நேற்று மதியம் சென்னை வந்தார். டெல்லியில் இருந்து 17-ஆம் தேதி சென்னை திரும்புவதாக இருந்த ஆதவ் அர்ஜுனாவும் திடீரென நேற்று காலை சென்னை வந்தார். இருவரும் விஜய்யை அவரது இல்லத்தில் தனிமையில் சந்தித்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.
அவருடன் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மட்டும் அனுமதிக்கப்பட்டார். இந்த ஆலோசனையில் ஜான் அனுமதிக்கப்படவில்லை. ஆலோசனை முடிந்த பின்னர் ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர் ஜான் ஆரோக்கியசாமி மூவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். இதன் மூலம் ஆதவ் அர்ஜுனா சொல்லாத செய்தி ஒன்றை சொல்லியுள்ளதாக கட்சியினர் கருதுகின்றனர். காரணம் ஆதவ் அர்ஜுனா என்னதான் வியூக வகுப்பாளராக வெற்றிகரமாக ஒரு பெரிய கட்சியில் சிறப்பாக செயல்பட்டு வெளியில் வந்து தவெகவில் இணைந்தாலும் இங்கு எங்களுக்கு கீழ் தான் செயல்பட வேண்டும், எங்கள் சொல்படி தான் நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயங்கிய புஸ்ஸி, ஜான் இருவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்து அவர் மூலம் தன்னுடைய எண்ணத்தை விஜய்க்கு அழுத்தமாக ஆதவ் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய், பிரசாந்த் கிஷோரை பெரிதும் மதிப்பவர்.பிரஷாந்த் கிஷோர் தவெகவின் எதார்த்த நிலையை விஜய்யிடம் எடுத்துச் சொல்வார். வருகின்ற தேர்தலில் தவெக எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், தவெகவுக்குள் உள்ள பிரச்சனைகள், விஜய்யின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்த ஆலோசனையில் பிரசாந்த் கிஷோர் பகிர்ந்து இருப்பார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தால் அது கிட்டத்தட்ட ஆதவ் அர்ஜுனாவின் எண்ணமாக தான் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதன் மூலம் தனது எண்ணத்தை பிரசாந்த் கிஷோர் மூலம் விஜய்க்கு தெளிவாக ஆதவ் அர்ஜுனா பதிய வைத்துவிட்டார் என்பதாகத்தான் இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.
இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் விஜய், ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர் சந்திப்பில் பொதுச் செயலாளர் ஆனந்த் மட்டுமே அனுமதிக்கப்பட்டார். ஜான் ஆரோக்கியசாமியை அனுமதிக்கவில்லை. இரண்டு முக்கிய வியூக வகுப்பாளருடன் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் மட்டும் பேசியது கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்பதை வியூக வகுப்பாளர்கள் முக்கியமாக பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் ஆதவ் மட்டுமே முடிவெடுப்பார் என்கிற செய்தியை விஜய் சொல்லாமல் சொல்லி இருப்பதாக கட்சிக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
அதன் பின்னர் விஜய்யின் உத்தரவின் பெயரில் ஆதவ் அர்ஜுனாவும், பிரசாந்தி ஷோரூம், ஜான் ஆரோக்கியசாமி உடன் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் அடுத்த கட்ட வியூகத்தை, எப்படி கட்சியை கொண்டு செல்வது என்பதை ஆதவ் அர்ஜுனா ஜான் ஆரோக்கியசாமியின் ஆலோசனைப்படி நடக்க முடியாது, அதை தான் மட்டுமே தீர்மானிப்பேன் என்பதை மிக அழகாக பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததன் மூலம் ஆதவ் உணர்த்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் தற்போது ஒரு கட்சியின் தலைவர். வியூக வகுப்பாளராக நிறுவனம் எதையும் நடத்தவில்லை. ஆகவே அவர் இணைய வாய்ப்பில்லை, ஆனால் இந்த சந்திப்பில் என்னென்ன பேசினார்கள் பிரசாந்த் கிஷோர் என்ன ஆலோசனை கூறினார், அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்கிற விவரம் இதுவரை பொதுவெளியில் வரவில்லை. இது குறித்த வேறு ஏதாவது தகவல் வெளியானால் அனைத்தும் யூகமாக மட்டுமே இருக்கும். என்னென்ன பேசினார்கள்? என்ன ஆலோசனை சொல்லப்பட்டது என்கிற விபரம் கிடைத்த பின் அடுத்த செய்தியில் அதை பகிர்வோம்.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் மீது சந்தேகம்..! ஆதவ் அர்ஜூனாவை வைத்து கண்காணிக்க உத்தரவு… விஜய் அதிரடி..!