×
 

முதலில் இபிஎஸ், பிறகு அண்ணாமலை, இப்போது செங்கோட்டையன்.. என்ன தான் நடக்கிறது டெல்லியில்..?

கோபிச்செட்டிப்பாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக அரசியல் தலைவர்களின் திடீர் டெல்லி பயணங்களால் தேர்தல் களம் முன்கூட்டியே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்களுக்கு முன்னர் திடீரென டெல்லிக்கு சென்றிருந்தார். அங்கு கட்டப்பட்டுள்ள அதிமுகவின் புதிய அலுவலகத்தை பார்வையிட வந்ததாக அவர் முதலில் பேட்டி அளித்தார். ஆனால் அன்றைய தினமே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து 3 மணிநேரம் ஆலோசனை மேற்கொண்டார். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அந்த ஆலோசனையில் பங்கேற்றனர். பின்னர் தனியாக அரைமணிநேரம் அமித் ஷாவுடன் இபிஎஸ் பேசினார். ஆனால் இந்த சந்திப்பு தேர்தலுக்கான கூட்டணி அல்ல என்றும் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்காக சந்தித்தாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால், அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் 2026-ல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என இந்த சந்திப்பின் புகைப்படங்களை பகிர்ந்து கூட்டணிதான் என சூசகமாக கூறியிருந்தார்.

இதையும் படிங்க: அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்? நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் அவசர சந்திப்பு!

எடப்பாடி பழனிசாமி சென்று வந்த மறுநாளே தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். மத்திய இணைஅமைச்சர் எல்.முருகனுடன் இணைந்து அவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு வழக்கமான கட்சிரீதியான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும் அதிமுக - பாஜக கூட்டணி அமையும்பட்சத்தில் அதற்கு முட்டுக்கட்டையாக அண்ணாமலை இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தவே என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

ஏனெனில் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் என் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்தார். அதேபோன்று அமித் ஷா உடனான சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமியும், தமிழக பாஜக தலைவரை மாற்றுவது குறித்தும் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதுபற்றியும் அண்ணாமலையிடம் அமித் ஷா சில ஆலோசனைகளை வழங்கி இருந்தார்.

இந்த சூழ்நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியும், இப்போது கலகக்குரல் எழுப்பி வருபவருமான கோபிச்செட்டிப்பாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன் அவசரம், அவசரமாக டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். தொகுதி விஷயமாக நேரடியாக மத்திய நிதியமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இது மறைமுகமான அரசியல் பேரம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஒருசிலர் தந்த ஆலோசனை மற்றும் அழுத்தத்தால் தான் திடீரென இபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் கலகக்குரல் எழுப்பினார். ஆனால் இப்போது அதிமுக - பாஜக கூட்டணி கனிந்துவரும் நிலையில், தான் ஒதுக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் செங்கோட்டையனை ஆட்டிப் படைக்கிறது. இதற்காகவே தஞ்சம் கோரி அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

ஒருபக்கம் அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளாகும் திமுக அமைச்சர்கள் எல்லாம் திடீர் டெல்லி பயணங்களை மேற்கொள்கின்றனர். மறுபக்கம் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து டெல்லி சென்று வருகின்றனர். அப்படி அங்க என்னதான் இருக்கும்?...
 

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ.50 ஆயிரம் கோடி ஊழல்… நிர்மலா சீதாரமனை சந்தித்து உண்மையை உரைத்த கே.பி.ராமலிங்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share