இடைத்தேர்தலால் வளர்ந்த கட்சி அதிமுக.. இன்று இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறதா?
1972இல் திண்டுக்கல் இடைத்தேர்தல் மூலம் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக எழுந்த அதிமுக, இப்போது இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது தொடர்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர். இத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தமிழகத்தில் வளரத் துடிக்கும் பாஜக, 2026இல் ஆட்சியைப் பிடிக்க விரும்பும் தவெக உள்பட எந்தக் கட்சியுமே தேர்தலில் களமிறங்கவில்லை. எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது புதிது அல்ல. 2006 - 2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது நடைபெற்ற இளையான்குடி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 5 சட்டப்பேரவை இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. அப்போது புதிய கட்சியாக இருந்த தேமுதிக மட்டும் இடைத்தேர்தலைச் சந்தித்தது.
இதேபோல 2001 - 2006 காலகட்டத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணித்தது. இதேபோல 2015 ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையும் திமுக புறக்கணித்தது. இப்படி திமுக - அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களை இரு கட்சிகளுமே புறக்கணித்துள்ளன, இத்தனைக்கும் 1972இல் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல் மூலம் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்த கட்சி அதிமுக. ஆனால், இன்று இடைத்தேர்தலில் போட்டியிடுவதையே அதிமுக தவிர்க்கிறது. விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு என அதிமுகவின் இடைத்தேர்தல் புறக்கணிப்பு தொடர்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை2000த்துக்கு முன்பு வரை இடைத்தேர்தல் என்பது ஆட்சியை எடைப் போட்டு பார்க்கும் தேர்தலாக இருந்தது. இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள்கூட வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி வெற்றி பெற்றாக வேண்டும் என்று விதியை உருவாக்கிவிட்டார்கள். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று, மக்கள் ஆதரவு தங்கள் ஆட்சிக்கு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக வாக்குகளைப் பணத்தால் வாங்கும் போக்கு, பரிசுப் பொருட்களை வாரி வழங்குவது என ஆளுங்கட்சிகள் இடைத்தேர்தலை கேலிக்கூத்தாக்கிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி ..இன்று வெளியாக வாய்ப்பு ..!
இடைத்தேர்தல் வெற்றியை கவுரவமாகப் பார்க்கும் போக்கு ஆளுங்கட்சியிடம் உள்ளது. என்றாலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஆளுங்கட்சியின் குறைகளையும், அவர்களுடைய செயல்பாடுகளையும் வாக்காளர்கள் மத்தியில் எடுத்து வைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த அதிமுக இந்த வாய்ப்பை தவறவிடலாமா என்பதுதான் கேள்வி,
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் அறிவிப்பின் பின்னணி என்ன?