×
 

கத்திமுனையில் விமானம் கடத்தல்.. 3 பேருக்கு கத்திக்குத்து.. நடுவானில் பயணிகள் திக்.. திக்..!

பெலிஸில் சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்க நாடான பெலீஸ் (Belize)நாட்டின் எல்லைப் பகுதியில் கோரோஸல் (Corozal) என்ற சிறிய நகரம் உள்ளது. இந்த கோரோஸல் என்ற சிறிய நகரத்தில் இருந்து சான் பெட்ரோ என்ற சுற்றுலா நகருக்கு 14 பயணிகள், 2 விமானிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.  14 பயணிகளில் இருவர் அமெரிக்கர். மற்றவர்கள் பெலிஸ் நாட்டினர்.

2 அமெரிக்கர்களில் ஒருவர் அகின்யேலா சாவா டெய்லர். அமெரிக்க ராணுவத்தில் பணி புரிந்தவர் தான் இந்த அகின்யேலா சாவா டெய்லர். இந்த நிலையில் விமானம் புறப்பட்டு நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, டெய்லர், திடீரென கத்தியை  காட்டி அனைவரையும் மிரட்ட தொடங்கி உள்ளார்.விமானத்தை வேறு இடத்துக்கு கொண்டு செல்லும்படி விமானிகளை மிரட்டினார்.

தன்னை இந்த நாட்டை விட்டு வெளியே கொண்டு சென்று விடுமாறு விமானிகளிடம் கோரிக்கை விடுத்தார். இதனால், விமானத்தில் பதற்றம் நிலவியது. அவரை தடுக்க முயன்றவர்கள், அவரது பேச்சை கேட்க முயன்றவர்கள் என  ஒரு விமானி உள்பட 3 பேரை அவர் கத்தியால் குத்தினார். தன்னை பெலிஸ் நாட்டை விட்டு வெளியே கொண்டு விட சம்மதிக்கும் படியும், விமானியை இதற்கு ஒப்புக்கொள்ள சொல்லும் படியும் அனைவரையும் அவர் மிரட்டி உள்ளார்.

இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் விமானிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விமானம் பறக்கும் தொலைவு, உயரம் ஆகியவற்றை குறித்து கொண்டு, போலீஸ் துணையுடன் கடத்தல்காரனை பிடிக்க  முயற்சிப்பதாக கூறினர்.  

இதையும் படிங்க: போர்டிங் பாஸ் இல்லாமல் விமான நிலையத்தில் உள்ளே போகலாம்.. புதிய விதி வரப்போகிறது!

இவ்வாறே சுமார் 2 மணி நேரம் நடுவானில் விமானம் சுற்றிக் கொண்டு இருந்தது. இதன் காரணமாக விமானத்தில் இருந்த எரிபொருளும் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து கொண்டு இருந்தது. எரிபொருள் தீர்ந்தால் விமானம் கீழே விழுந்து நொறுங்கும். எனவே வேறு வழியில்லாமல் விமானத்தை தரை இறக்க வேண்டிய கட்டாயத்துக்கு விமானிகள் தள்ளப்பட்டனர். எனவே பிலிப் கோல்ட்சன் (Philip Goldson)என்கிற சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. விமானிகள் கணித்தபடியே, விமானம் தரையிறங்கியதும் எரிபொருள் தீர்ந்து போனது.  இதற்கு மேல் விமானம் பறக்க வாய்ப்பில்லை என்பதாலும், உயிர் பயத்திலும், பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கிக்கொண்டு இருந்தனர்.

விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்கர் டெய்லரும் இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பயணி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் கடத்தல்காரன் டெய்லரை குறி பார்த்து சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த டெய்லர், அங்கேயே சுருண்டு விழுந்தான். துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் பயன்படுத்தியது உரிமம் பெற்ற துப்பாக்கி என்பது பின்னர் தெரியவந்தது. உடனே போலீசார் கடத்தல்காரன் டெய்லரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே டெய்லர் இறந்தார்.

விமானிகள் சரியான நேரத்தில் விமானத்தை தரையிறக்கியதும், கடத்தல்காரனை பயணியே சுட்டுக் கொன்றதும் அமெரிக்காவில் பரபரப்புச் செய்தியாக மாறியது. நடுவானில் விமானம் கடத்தப்பட்டதும், கடத்தல்காரனை பயணி ஒருவரே சுட்டுக் கொன்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வரும் 21,22 ஆம் தேதிகளில் அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி..! பயண விவரங்களை வெளியிட்ட பவன் கேரா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share