மோசடியாக பதிவு செய்யப்பட்ட BS-4 வாகனங்கள்.. அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு..!
மோசடியாக பதிவு செய்யப்பட்ட BS-4 வாகனங்கள் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2020ம் ஆண்டுக்கு பின், பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பி.எஸ். 4 வாகனங்கள், 2020ம் ஆண்டு ஏப்ரலுக்கு பின் தடை செய்யப்பட்டன. இருப்பினும், 2020ம் ஆண்டுக்கு பின்னும் பி.எஸ். 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக விசாரிக்க உத்தரவிடக் கோரியும், சென்னையைச் சேர்ந்த தேவதாஸ்காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: சாட்சி விசாரணையை தடையின்றி நடத்துங்கள்.. என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு..!
அவர் தனது மனுவில், தமிழகத்தில் பி.எஸ். 4 ரக வாகனங்கள் உள்பட 315 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை ஆணையர் தெரிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மோசடியில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் மோசடியாக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 26ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: பணத்தைக் கட்டினால் தான் வங்கிக் கணக்கை கையாள முடியும்.. திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு நீதிமன்றம் செக்..!