ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியை தாக்கிய பேருந்து நடத்துனர்: 10 ரூபாய் டிக்கெட் பிரச்சினையால் விபரீதம்..
பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியை பேருந்தில் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய பேருந்து நடத்துனர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ்அதிகாரியை நடத்துனர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகியது இதன்பின்புதான் நடத்துனர் மீது நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆ.எல்.மீனா. இவர் ஜெய்ப்பூரில் அரசு பேருந்தில் கடந்த வெள்ளிக்கிழமை பயணித்தார். அந்த பேருந்து இருஅடுக்கு(டபுள்டக்கர்) பேருந்தாகும். ஓய்வு பெற்ற அதிகாரி மீனா, கீழ்தளத்தில் ஏறி, கனோட்டா பகுதிச் செல்ல டிக்கெட் எடுத்தார்.
ஆனால், பேருந்து கனோட்டா பகுதியில் நிற்காமல் சென்றது. இதனால் பேருந்தை நிற்கச் சொல்லி மீனா சத்தம்போட்டார். ஆனால், பேருந்து நயானா பகுதியை நோக்கிச் சென்று அங்கு நின்றது. அப்போது இறங்க முயன்ற மீனாவிடம், நடத்துனர் கூடுதலாக 10 ரூபாய் கட்டணமாகக் கேட்டார். அதற்கு முடியாது என மறுத்த ஓய்வுபெற்ற அதிகாரி மீனா, நான் இறங்க வேண்டிய இடம் வந்தபோது நான் பேருந்தை நிறுத்தக் கோரியும் நீ்ங்கள் நிறுத்தவில்லை. ஆதலால் கூடுதல் கட்டணம் தரமுடியாது எனத் தெரிவித்துள்ளார். கூடுதலாக கட்டணம் கேட்டவகையில் மீனாவுக்கும், நடத்துனருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
அப்போது ஓய்வு பெற்ற அதிகாரி மீனா, நடத்துனர் கன்னத்தில் அறைந்தார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர், மீனாவை இருக்கையில் இருந்து இழுத்து, பேருந்துக்குள் கீழே தள்ளி, அவரை கடுமையாகத் தாக்கி, எட்டி உதைத்தார். முதியவரான ஓய்வு பெற்ற அதிகாரி மீனா, இளம் வயது நடத்துனருடன் சண்டை போட முடியாமல் கீழே விழுந்தார். ஆனால், எந்தவிதமான இரக்கமும் இன்றி நடத்துனர் காட்டுமிராண்டித்தனமாக முதியவரை தாக்கும் காட்சிகள் காணொலியில் வலம் வருகின்றன.
இதையும் படிங்க: குலைநடுங்க வைத்த சிறுத்தை சிக்கியது ..நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் ..!
அதன்பின் பேருந்தில் இருந்த பயணிகள் தலையி்ட்டு ஓய்வு பெற்ற அதிகாரியை நடத்துனர் தாக்குதலில் இருந்து மீட்டு, சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, ஓய்வு பெற்ற அதிகாரி மீனா, கனோட்டா போலீஸ் நிலையத்தில் பேருந்து நடத்துனர் மீது புகார் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியதையடுத்து, ஜெய்ப்பூர் நகரப் பேருந்து கழகம், நடத்துனர் ஞான்ஷியாம் ஷர்மாவை உடனடியாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. ஜெய்ப்பூர் நகர போக்குவரத்துக் கழகம் பிறப்பித்த உத்தரவில் “ முதியரை, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதும், பேருந்து பயணிகளிடம் தவறாக நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆதலால், உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள். இது தொடர்பாக தனியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும், அதுவரை ஊதியம் நிறுத்திவைக்கப்படும். படிகள் மட்டும்வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிறிஸ்தவர்கள் மீது 834 தாக்குதல்கள்: 2023 ஆண்டைவிட 2024ல் அதிகம்: யுசிஎப் தகவல்..