முதல்வர் ஸ்டாலின் செய்வது கொஞ்சமும் சரியல்ல.. கடுகடுத்த மத்திய அமைச்சர் ஜோஷி..!
தமிழகத்தில் ஊழலையும் தங்கள் ஆட்சியின் தோல்வியையும் மறைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை விவகாரத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சனம் செய்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக தென் மாநிலங்களின் கூட்டு நடவடிக்கைகள் குழு தொடங்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மார்ச் 22இல் 7 மாநில முதல்வர்களின் கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைகள் குறித்து கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசினார்.
"தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசை மு.க. ஸ்டாலின் எதிர்க்கிறார். அவருடைய எதிர்ப்பு முற்றிலும் தவறானது. தமிழகத்தில் அவருடைய ஆட்சியில் நடைபெறும் ஊழல் மற்றும் ஆட்சியின் தோல்வியை மறைக்கவே இதை ஊதிப் பெரிதாக்குகிறார். முதலில் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அப்படி ஆணையம் அமைக்கப்படவில்லை. அப்படியிருக்க தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைக்க உத்தேசித்திருக்கும் கூட்டு நடவடிக்கை குழு தேவையற்றது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக, இதுவரை எந்த விதிமுறைகளும் கையில் இல்லாதபோது ஸ்டாலின் அமைக்விருக்கும் கூட்டு நடவடிக்கை குழு என்னதான் செய்யும்?
எல்லோரும் அச்சப்படுவது போல, எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தக் குறைப்பும் இருக்காது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டார். அதையும் தமிழகத்துக்கு வந்தபோதுதான் அமித் ஷா தெரிவித்தார். அதன்பிறகும் தொகுதி மறுவரையறை தொடர்பாக ஸ்டாலின் அபத்தமாக பேசி வருகிறார். இது கொஞ்சமும் சரியல்ல,'' என்று ஜோஷி விமர்சித்தார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையரை விவகாரம்.. மாநில முதல்வர்களுக்கு கடிதம்... சென்னையில் அடுத்த ஆலோசனை.. ஜெட் வேகத்தில் முதல்வர் ஸ்டாலின்!
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவே இல்லை.. ஸ்டாலின் ஆக்ஷனுக்கு சந்திரபாபு ரியாக்ஷன்.!