போலி ஆதார் மூலம் திருப்பூர் வந்தடைந்த 5 சிறுமிகள் பத்திரமாக மீட்பு..
போலி ஆதார் தயாரித்து ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து திருப்பூருக்கு அனுப்பி விடப்பட்ட 5 குழந்தைகளை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.
கடந்த 6ஆம் தேதி கேரளா செல்லும் ரயிலில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐந்து சிறுமிகள் திருப்பூர் ரயில்வே நிலையத்தில் இறங்கியுள்ளனர். இவர்களை நோட்டமட்ட ரயில்வே போலீசார், சந்தேகம் அடைந்து ஐந்து சிறுமிகளையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஐந்து சிறுமிகளிடமிருந்தும் அவர்களது ஆதார் கார்டு மற்றும் அடையாள அட்டைகள் பெறப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது சிறுமிகளின் ஆதார் கார்டை பரிசோதித்ததில் ஐந்து சிறுமிகளும் 18 வயது பூர்த்தியானது போன்று பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் ஆதார் அட்டையின் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது க்யூ ஆர் கோட் ஸ்கேன் ஆகாமல் இருந்ததால் ஆதார் அட்டை போலியானது என்று தெரிய வந்தது. தொடர்ந்து ரயில்வே போலீசார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: IPL-ன் போது மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை.. பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு..!
சமூக இடத்திற்கு விரைந்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், ஐந்து சிறுமியரிடமும் விசாரணை நடத்தினர். அதில் ஐந்து சிறுமிகளும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் உண்மையான வயது 16 என்பதும் தெரியவந்தது.
இது மட்டும் இன்றி, ஐந்து சிறுமிகளும் போலி ஆதார் அட்டை மூலமாக திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு தொழிலாளியாக அனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்தது.இதனை அடுத்து ஜார்கண்டில் இருந்து சிறுமியரின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் மாவட்ட பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குழந்தை தொழிலாளர்களின் வீரியம் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டு மீண்டும் ஐந்து சிறுமியரும் சொந்த மாநிலமான ஜர்கண்டுக்கு இன்று மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக இது குறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில்,
ஜார்கண்ட் மாநில ரயில்வே நிலையத்தில் இதுபோன்ற சமூக விரோதிகள் சிலர் போலி ஆதார் உள்ளிட்ட பல்வேறு அடையாள அட்டைகளை தயாரித்து ஆதாயம் தேடி வருவதாக குற்றம் சாட்டினர். போலி ஆதார் அட்டை தயாரித்த நபர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிர படுத்தப்பட்ட வருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையும் படிங்க: சூப்பர் சாதனைங்க..! உலகின் 20 மாசடைந்த நகரங்களில் 13 இந்தியாவில் இருக்காம்..! தமிழகம் இருக்கா..?