×
 

உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை கொடுத்திருக்கு... நீட் விலக்கு பெறுவோம்... மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!!

நீட் தேர்வு விலக்கு கோரி சட்டப் போராட்டம் தொய்வின்றி தொடரும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றி மத்திய அரசுக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது.

நீட் தேர்வு தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து வருகிறது. பொதுவாக நுழைவுத் தேர்வு என்பது ஏழை, எளிய, கிராமப்புற, விளம்பு நிலை மாணவர்களை பாதிக்கக் கூடியது. அதனால் தான் அதனை தவிர்த்து விட்டு பள்ளிக் கல்வித்துறை நடத்தும் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் மூலமே மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது.

இதனால் தான், மாநில அளவில் நடந்துக் கொண்டிருந்த நுழைவுத் தேர்வை தனி சட்டம் இயற்றி அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அகற்றினார். அந்த சட்டம் மூலம் கல்லூரி மாணவர் சேர்க்கையையில் எளிய, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு சேர்க்கை உறுதி செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் தான் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடந்து, திறமையான தரமான மருத்துவர்கள் கிடைத்தனர். இதனால் தான் மருத்துவத் துறையில் நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கான திருத்தச் சட்டம், அதற்கு பிறகு கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய சட்டம் ஆகியவை மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை கொண்டு வந்தது.

இது நம்முடைய மாணவர்களை வெகுவாக பாதித்து வருகிறது. மாநில அரசுகளால் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் எப்படி மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யக் கூடிய உரிமையை, மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு பறித்துக் கொண்டது. நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்கான வசதி வாய்ப்புகள் இருக்கக் கூடிய மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு சாதகமா இருக்கிறது என்பது தான் நீட் தேர்வின் அநீதி. இதற்கு எதிராக மக்கள் மன்றத்தில் நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு முதல்வரின் சுயநல நாடகம்..! திமுகவை ரோஸ்ட் செய்த அண்ணாமலை..!

ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் சட்டப் போட்டத்தை தொடங்கினோம். மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் டாக்டர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தோம்.

சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வி பெறும் கனவுக்கு பெரும் இடையூறாகவும், சமூக பொருளாதரத்தில் வளர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு சாதகமாகவும் இருந்து எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளில் இருக்கிற பல தரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு சீர்குலைத்திருப்பதாக இந்த குழு தெரிவித்தது. எனவே, 2006-ல் தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டம் மாதிரியான சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறலாம் என்று இந்த குழு பரிந்துரை செய்தது.

இந்த விரிவான பரிந்துரைகளை செயல்படுத்த அமைக்கப்பட்ட அரசு செயலாளர்கள் கொண்ட குழு நீட் விலக்கு சட்டத்தை உருவாக்க பரிந்துரை செய்தது. இதன் தொடர்ச்சியாக நீட் தேர்வு விலக்கு சட்டத்தை 13.9.2021-ல் நான் முன்மொழிந்தேன். அந்த சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். இந்த சட்ட முன்வடிவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அரசியல் சட்ட கடமையை செய்யாமல் அரசியல் செய்ய ஆரம்பித்தார் என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறேன்.

ஆனால், நாமும் சளைக்காமல், அந்த சட்டத்திற்கு ஒப்புதல் பெற கடுமையாக போராடினோம். இந்த நிலையில், 01.02.2022 அன்று அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். உடனடியாக 05.02.2022 அன்று நாமும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினோம். அதில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.

அதன் பின்னர் தமிழ்நாடு சட்டப் பேரவையின் வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் 08.02.2022 அன்று நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து நான் வலியுறுத்தினேன். மேலும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து இந்த மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தினேன். அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த தொடர் முயற்சியின் விளைவாக, ஆளுநருக்கு நாம் அனுப்பி மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.

நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்தகட்டமாக மத்திய அரசை வலியுறுத்தி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் எழுப்பிய சந்தேகங்களுக்கு தமிழ்நாடு அரசு உடனுக்குடன் விளக்கம் அளித்தது.

ஆனால், இதனை எல்லாம் ஏற்காமல், நமது மாணவர்களுக்கு பெரும் பேரிடாக மத்திய அரசு நீட் விலக்கு மசோதாவுக்கு தர மறுத்து விட்டது. மத்திய அரசு நமது கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம். ஆனால், நீட் தேர்வை அகற்றுவதற்கான நம்முடைய போராட்டம் எந்த வகையிலும் முடியாது. நீட் தேர்வு என்பது விலக்க முடியாத தேர்வு அல்ல. பயிற்சி மையங்களின் நலனுக்கான, யாரோ சிலர் தங்களது சுயநலனுக்காக மத்திய மத்திய அரசை தவறாக வழிநடத்தி நடத்துற தேர்வு. அதையும் முறையாக நடத்தவில்லை.

இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் சிபிஐ மூலமாக வழக்கு நடந்து வருகிறது. நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. சட்டப் போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்து நடத்தினால் நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீட் ஒழிப்பே நிரந்தர தீர்வு..! முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share