×
 

மாநிலங்களின் உரிமையை நீதிமன்றங்கள் தான் காக்கின்றன.. மெட்ராஸ் பார் அசோசியேஷன் கொண்டாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!

மாநிலங்களின் உரிமையை நீதிமன்றங்கள் தான் காக்கின்றன என மெட்ராஸ் பார் அசோசியேஷன் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி தத்துவத்தைபாதிக்கச் செய்யும் நிலை சமீப காலமாக காணப்படுவதாக கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின், மாநிலங்களின் உரிமைகளை நீதிமன்றங்கள் பாதுகாப்பதாகவும் தெரிவித்தார்.

இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பழமையான வழக்கறிஞர்கள் சங்கமான, மெட்ராஸ் பார் அசோசியேஷனின் 160 வது ஆண்டு கொண்டாட்டம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க: விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், வேளாண் பட்ஜெட் பாராட்டத்தக்க ஒன்று - வேல்முருகன்..!

விழாவில், முன்னாள் அட்டர்னி ஜெனரல்கள் கே.பராசரன் மற்றும் கே.கே.வேணுகோபால் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழில் பேசுவார் என எதிர்பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் பேசுவார் என நினைத்த நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தமிழில் பேசியதால் இக்கட்டான நிலையில் இருப்பதாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதைச் சுட்டிக்காட்டி, இது தான் இருமொழிக் கொள்கை எனவும், இதுதான் தமிழ்நாடு எனவும், இக்கட்டான நிலை அல்ல எனவும் குறிப்பிட்டார்.

சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதிலும், அநீதி எனும் நோய்க்கான மருத்துவர்களாகவும், சமூக நீதியை பாதுகாப்பவர்களாகவும் வழக்கறிஞர்க்ள் இருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர் , வெவ்வேறு மதம், இனம், பண்பாட்டு முறைகள் இருந்தாலும், இந்தியாவை மதச்சார்பற்ற குடியரசாக நீடிக்கச் செய்வதில் இந்திய அரசியல் சட்டம் உயிர்ப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியல் சட்டத்தின் முக்கிய கட்டமைப்பான கூட்டாட்சி தத்துவம் பாதிக்கச் செய்யும் நிலை சமீபகாலமாக நிலவுவதாகக் கூறிய முதல்வர், கல்வி, நிதி போன்றவற்றில் மாநில அரசுகளின் உரிமைகள் பாதிக்கபடுவதாகவும், அந்த பாதிப்புகளில் இருந்து மாநில உரிமைகளை நீதிமன்றங்கள் பாதுகாக்கின்றன எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், வழக்கறிஞர்கள் சேமநல நிதி உயர்த்தப்பட்டது, புதிதாக 73 நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் கணினி வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது, சிவகங்கை, நாமக்கல்லில் புதிய சட்டக் கல்லூரிகள் அமைக்கப்படுவது நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் முன் வைத்த கோரிக்கையான, உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என இன்று மீண்டும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், கே.வி.விஸ்வநாதன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ஆகியோர் அரசியல் சட்டம் குறித்து விளக்கி பேசினர்.

இதையும் படிங்க: நாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்.. சென்னையில் 100 இடங்களில் நேரலையில் பார்க்க ஏற்பாடு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share