×
 

காதலனை விஷம் வைத்துக் கொன்ற கல்லூரி மாணவி: தூக்குத் தண்டனை பெற்றது எப்படி? 'டிஜிட்டல் ஆதாரங்கள்' பற்றி பரபரப்பு தகவல்கள்

கேரளாவில் தமிழக எல்லைப் பகுதியில் காதலனுக்கு விஷம் வைத்துக் கொன்ற கல்லூரி மாணவிக்கு சமீபத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த கொலை வழக்கை விட, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு உச்ச பட்ச தண்டனையான தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்வு, நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது. 

அதே நாளில், கொல்கத்தாவில் பெண் டாக்டர்  பாலியல் பலாத்கார கொலை வழக்கிலும் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அனைவருடைய எதிர்பார்ப்புக்கும் மாறாக அந்தக் கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. 

சாகும் வரை ஆயுள் தண்டனைதான் விதிக்கப்பட்டது. இந்த வகையிலும், கேரள வழக்கின் தூக்குத் தண்டனை நாடு தழுவிய 'பேசு பொருளாக' இருந்தது. தற்போது இந்த வழக்கில் அந்த கல்லூரி மாணவிக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தந்தது குறித்த முக்கிய ஆதாரங்கள் பற்றிய தகவல்களை, அரசு வழக்குரைஞர் மற்றும் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: “நான் பிரபாகரனைச் சந்திக்கவே இல்லை” ... சீமான் அடித்த திடீர் பல்டி - காரணம் என்ன? 

இந்த வழக்கில், அரசு வழக்குரைஞராக பணிபுரிந்த வி.எஸ். வினீத் குமார் குற்ற வழக்குகளில் அனுபவசாலி என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. அவரிடம் இந்த வழக்குக்கான ஆதாரங்களை திரட்டியது எப்படி ?என்று கேட்டபோது, அவர் கூறியதாவது:-

கைபேசி தேடு பொறியில்  தகவல் தேடிய கரிஷ்மா...

கரிஷ்மா ஒரு முறை காதலனுக்கு பழச்சாற்றில் அளவுக்கு அதிகமான காய்ச்சல் மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்திருந்தார். அதற்கு முன்பாக தனது கைபேசியில் உள்ள தேடு பொறியில் அது குறித்த தகவல்களை தீவிரமாக தேடி இருக்கிறார். ஆனால் பழச்சாற்றை காதலன் ஷரோன்ராஜ் முழுமையாக பருகாததால் அன்று அவர் உயிர் பிழைத்து விட்டார். 

அடுத்ததாக, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி மீண்டும் தனது கைபேசி தேடுபொறியில் கொடிய விஷத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்து குறித்தும், அது மனித உடலில் எவ்வாறு செயல்படும்.. அதை எவ்வாறு கொடுப்பது? என்பது பற்றிய தகவல்களையும் தேடி இருக்கிறார். அந்த பூச்சிக்கொல்லி மருந்து அவருடைய வீட்டிலேயே இருந்து இருக்கிறது. 

அன்று இரவோடு இரவாக காதலனை தனது வீட்டிற்கு அழைத்த கரிஷ்மா கசாயத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்தார். இதனால் காதலனுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், ஷரோன்ராஜ். சிகிச்சை 15அக்டோபர் 25ஆம் தேதி என்று அவர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். 

கைப்பேசி தகவல்களை 
அழித்த கரிஷ்மா

இதனால் போலீசார் தன்னிடம் விசாரணை நடத்துவார்கள் என்று சந்தேகித்த கரிஷ்மா கைபேசியில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழித்து இருக்கிறார். அத்துடன் அழிக்கப்பட்ட அந்த தகவல்களை கைபேசியில் இருந்து மீட்டெடுக்க முடியுமா என்பது குறித்தும் தேடு பொறியில் விளக்கங்களை தேடி இருக்கிறார். இதனால் போலீஸ் விசாரணையின் போது கைபேசி தகவல்கள் அனைத்தும் அளிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 

அதைத்தொடர்ந்து தடையவியல் ஆய்வகத்துக்கு கைபேசி அனுப்பி வைக்கப்பட்டு "கிளவுட் டேட்டா"வில் பதிவாகி இருந்த அனைத்து தகவல்களும் மீட்டு எடுக்கப்பட்டன. கைபேசியில் இருந்த வாட்ஸ்அப் உரையாடல்கள், வீடியோ அழைப்புகள் தேடுபொறூயில் அவர் தேடிய தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் மீட்டெடுக்கப்பட்டு டிஜிட்டல் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் சம்பவம் நடந்த நாள் அன்று காதலன் கரிஷ்மாவின் வீட்டிற்கு வந்து சென்றதற்கான ஆதாரமாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், இருவருக்கும் இடையே நடந்த வாட்ஸ் அப் உரையாடல் பதிவுகள், இருவரும் பயன்படுத்திய பென் டிரைவ் ஹாட் டிஸ்க் மற்றும் சிடி ஆகியவற்றில் உள்ள தகவல்கள் டிஜிட்டல் ஆதாரமாகவும் மற்றும் சூழ்நிலை ஆதாரங்களையும் துணையாக நிலைநிறுத்தி வழக்கை நீதிமன்றத்தில் நிரூபித்தோம்".

இவ்வாறு அரசு வழக்குரைஞர் வினீத் குமார் கூறினார்.

நீதிபதி பாராட்டு 

வழக்கில் தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி ஏ எம் பஷீர் காவல் துறையினரின் புலன் விசாரணையை தீர்ப்பில் பெரிதும் பாராட்டி இருந்தார். மேலும் அவர் காதலன் மரணப்படுக்கையில் இருந்த போதும் கரிஷ்மா மரண வாக்குமூலம் அளித்த போதும் அவர் மீது தனக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை என்றும் அவளை தான் தண்டிக்க விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். 

அவர் மேலும் கூறும்போது "இந்த குற்றம் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துள்ளது. அப்பாவி இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். விஷம் கொடுக்கப்பட்டதால் சிறுநீரகம், கல்லீரல் நுரையீரல் உள்ளிட்ட உள் உறுப்புகள் அனைத்தும் அழுகி உதடு முதல் ஆசனவாய் வரை தாங்க முடியாத வலியுடன் 11 நாட்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்த முடியாமல் ஷாரோன் ராஜ் உயிருக்கு போராடி இருக்கிறார்" என்றும் அவர் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். 

அதிலும் குறிப்பாக குற்றவாளி கரிஷ்மா தனது காதலனை மட்டுமல்ல, அந்த அப்பாவி கல்லூரி மாணவன் அளித்த பரிசுத்தமான கபடம் அற்ற தூய காதலையும் கொலை செய்திருக்கிறார். இது ஒட்டுமொத்த சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கி உள்ளது. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு இதை அரிதிலும் அரிதான வழக்காக கொண்டு உச்ச பட்ச தண்டனையான தூக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டு இருந்தது தான் முத்தாய்ப்பு. 

போலீஸ் நிலையத்தில் 
தற்கொலைக்கு முயன்ற காதலி 

இந்த வழக்கில் திறமையாக துப்பு துலக்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு ரஷீத் கூறும்போது,  "நெடுமன் காடு போலீஸ் நிலையத்தில் கரிஷ்மா காவலில் வைக்கப்பட்டு இருந்தபோது கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த கிருமிநாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்ற தகவலையும் வெளியிட்டார். 

அதைத்தொடர்ந்து வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட் இடம் அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டார் கரிஷ்மா. தாங்கள் இருவரும் காதலித்து வந்தது உண்மைதான் என்றும் , அதன் பின் வேறு ஒருவருடன் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் காதலை கைவிடும்படி கேட்டதாகவும், அதற்கு காதலன்மறுத்ததால் விஷம் கொடுத்துக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார் என்று அவர் தெரிவித்தார். 

இந்த தீர்ப்பு குறித்து கொலை செய்யப்பட்ட ஷாரோனின் குடும்பத்தினர் திருப்தி தெரிவித்தனர். இந்த தீர்ப்பை கேட்டதும் தங்கள் தாயாருக்கு ஆறுதல் கிடைத்ததாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஆளுநர் விருந்து திமுக புறக்கணிக்குமா? அரசு சார்பில் கலந்துக்கொள்வார்களா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share