கடன் தொல்லையால் விபரீதம்.. 2 பிள்ளைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை.. சென்னையில் சோகம்..!
கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சலால் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்றொரு சொற்றொடர் வெகுகாலமாக நமது ஊரில் சொல்லப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு நெஞ்சை கசக்கிக் பிழியும் வேதனை வேறாரு இன்னலுக்கு இருக்காது. நோய், தோல்வி, பிரிவு, மரணம், வறுமை என இப்படி பல பிரச்னைகளை ஒருமனிதன் தன் வாழ்நாளில் சந்திக்கக் கூடும். ஆனால் கூனிக் குறுகி தன் உயிரையே மாய்த்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஒருவன் தள்ளப்படுவதற்கு கடன்பிரச்னை தான் முக்கிய காரணியாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில், சமூக வலைதளங்களில் நாம் இதுபோன்ற எண்ணற்ற செய்திகளை வாசிக்கிறோம், பார்க்கிறோம்.. ஆனால் இது தொடர்கதையாகத் தான் உள்ளது.
அந்த வகையில் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சுமதி, வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அடிப்படையில் கணவன் - மனைவி இருவருமே நல்ல வேலையில் இருந்தபோதிலும் கடன் பிரச்னையால் சூழப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் அளவுக்கு இவர்களுக்கு கடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்கள்.. பயணிகள் 2 பேர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!
இந்த சூழ்நிலையில் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க உயிரை போக்கிக் கொள்வது தான் ஒரே முடிவு என்று கணவனும், மனைவியும் எடுத்ததாக தெரிகிறது. இதற்காக மனத்தை கல்லாக்கிக் கொண்டு ஆசையுடன் பெற்ற பிள்ளைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து அவர்கள் உயிர் பிரிவதை பார்த்துள்ளனர். அதன் பின்னர் தாங்களும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
அவர்களது வீடு நெடுநேரம் ஆகியும் திறக்கப்படாதது கண்டும், செல்போனில் தொடர்புகொண்டும் எடுக்கப்படாத நிலையில் திருமங்கலம் போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் உயிரற்ற சடலமாக இருந்துள்ளனர். அவர்களை உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
மருத்துவர் குடும்பத்தினர் யார், யாரிடம் கடன் பெற்றனர்? அதில் ஏதேனும் கந்து வட்டி பிரச்னை உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஃபேக் ஐடியால் வந்த பிரச்னை.. கற்களை வீசி தாக்கிக்கொண்ட மாணவர்கள் கைது.. போர்க்களமான கொரட்டூர் ரயில் நிலையம்..!