#BREAKING ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் - தேமுதிக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்ற நிலையில் 2023-ம் ஆண்டு காலமானார். அதன்பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அவரும் முதுமை காரணமாக உயிரிழந்த நிலையில் இப்போது நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு பதிலாக திமுக போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக புறக்கணிப்பு:
விக்ரவாண்டி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரதான எதிர்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை. ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்களே உள்ள நிலையில், முழு கவனத்தையும் அதில் செலுத்தலாம் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கருத்து கூறியுள்ளனர். இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட வேண்டாம் என அதிமுக முடிவு செய்து விட்டது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் படைபலமும், பணபலமும் தான் ஆதிக்கம் செலுத்தும் என குறிப்பிட்டுள்ளார். திமுக என்றாலே அராஜகம், வன்முறை என்பதால் இடைத்தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் நடைபெறும் என்றும் அதில் இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். நேர்மையாகவும், சுதந்திரமாகவும் இடைத்தேர்தல் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேமுதிக புறக்கணிப்பு:
அதிமுகவைத் தொடர்ந்து தற்போது தேமுதிகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைப்பது போல் மக்களை வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதேபாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்கப்போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.