கருப்பு நிற உடை.. கர்ஜித்த கனிமொழி, கொந்தளித்த வைகோ.. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்..!
கருப்பு நிற உடை அணிந்து, திமுக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கூடிய முதல்நாளில் இருந்தே அனல் பறக்கிறது. PM Sri திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நிதியை ஏன் தரவில்லை என்று திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆவேசமாக அளித்த பதில் சர்ச்சைக்கு வித்திட்டது. தனது பேச்சின் போது திமுக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதிகள் என்று கூறினார். இதற்கு திமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் தனது வார்த்தைகளை பின்வாங்கிக் கொள்வதாக தர்மேந்திர பிரதான் கூற, அந்த வார்த்தைகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் கூறியிருந்தார்.
ஆனாலும் ஆவேசம் குறையாத திமுக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் திரண்ட அவர்கள் கருப்பு நிற உடை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: தொகுதி மறுசீரமைப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு..! ஆதரவு திரட்டும் திமுக..!
மன்னிப்புக் கேள், மன்னிப்புக் கேள் தமிழக அரசிடம் மன்னிப்புக் கேள், கனிமொழியிடம் மன்னிப்புக் கேள், ஏற்க மாட்டோம், ஏற்க மாட்டோம் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்.. மமதையோடு பேசிய அமைச்சர் பிரதானே மன்னிப்புக் கேள் மன்னிப்புக்கேள்... வேண்டாம், வேண்டாம் மும்மொழித்திட்டம் வேண்டாம்... ஏற்க மாட்டோம் ஏற்க மாட்டோம் இந்தியை ஏற்க மாட்டோம்.. தீண்டாதே தீண்டாதே தமிழர்களை தீண்டாதே... எங்கள் உயிர் எங்கள் உயிர் தமிழ் எங்கள் உயிர்... என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். உரிமையைக் கேட்டால் அவமதிப்பதா?,. TAMILNADU EDUCATES BJP MANIPULATES போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் கையில் வைத்திருந்தனர்.
ஆர்பாட்டத்தின் போது பேசிய திமுக எம்.பி.கனிமொழி, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்கப்படாதது சாதாரண விஷயம் அல்ல, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட வேண்டிய நிதியைத் தான் கேட்கிறோம் என்றார். நிதியை தரமுடியாது என்று கூற மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்றும், கல்வி மத்திய அரசின் பட்டியலில் இல்லை என்றும் அது இது இசைவு பட்டியலில் தான் உள்ளது என்றும் கனிமொழி குறிப்பிட்டார். கல்வி நிதியை மத்திய அரசே வைத்துக்கொள்ள எந்த உரிமையும் இல்லை என்று அவர் கூறினார். இது அரசியல் சம்பந்தபட்ட விஷயம் அல்ல. தமிழக மாணவர்களின் நலன் சம்பந்தபட்ட விவகாரம் என்று கனிமொழி தெரிவித்தார். கல்வி அமைச்சரிடம் மன்னிப்பை எதிர்பார்க்கிறோம் என்று கூறிய கனிமொழி, திமுக சார்பில் அவர் மீது- உரிமைமீறல் நோட்டீஸ் வழங்க உள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய மதிமுக எம்.பி. வைகோ, கல்விக்கான நிதி மறுக்கப்பட்டது அராஜகம் என்றார். தமிழ் எம்பி.க்கள், தமிழர்கள் அநாகரீமானவர்களா.. இந்த சொற்களுக்காக பிரதான் மன்னிப்புக் கோர வேண்டும். எங்கள் மனம் புண்பட்டுள்ளது என்றார். வார்த்தைகளை பின்வாங்கி கொண்டால் போதாது. மன்னிப்பு தான் வேண்டும் என வைகோ பேசினார். ஆர்பாட்டத்தில் பங்கேற்ற திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி,.,.. திமுக எம்.பி.க்களின் போராட்டத்திற்கு தங்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவின் இரட்டை வேடத்தை தோலுரித்த தர்மேந்திர பிரதான்.. உச்சகட்ட பதற்றத்தில் அறிவாலயம்.. வானதி சீனிவாசன் பொளேர்!