வலுக்கும் வரி யுத்தம்: சீனா மீது மேலும் 50% வரி விதிப்பேன்.. அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!
அமெரிக்கா மீது சீனா விதித்துள்ள 34 சதவீத வரிவிதிப்பை திரும்பப் பெறாவிட்டால், சீனா மீது கூடுதலாக 50 சதவீதம் வரிவிதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2வது முறையாக அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றபின் அரசுக்கு இருக்கும் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமாக பரஸ்பர வரிவிதிப்பு முறையாகும். இதன்படி அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அதிகமாக வரிவிதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு அந்தநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரிவிதிப்பை அதிபர் ட்ரம்ப் கடந்த 2ம் தேதி அறிமுகம் செய்தார்.
இதில் சீனா மீது ஏற்கெனவே 25 சதவீதம் வரிவிதிப்பு இருந்தநிலையில் கூடுதலாக 34 சதவீதம் வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும் அதே 34 சதவீத வரிவிதிப்பை அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு விதிப்போம் என்று தெரிவித்தது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்க்கிற்கு எதிர்ப்பு.. வலுக்கும் மக்கள் போராட்டம்..!
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் சர்வதேச வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிந்தவாறு உள்ளன. அமெரிக்கப் பொருளாதாரம் விரைவில் மந்தநிலையை நோக்கி நகரும் என பொருளாதார ஆய்வு நிறுவனங்களின் அறிக்கையால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ சீனா அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது விதித்துள்ள 34 சதவீத வரியை திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே எங்கள் மீது நீண்டகாலமாக வரிவிதித்துவந்தீர்கள். இதை நீங்கள் திரும்பப் பெறாவிடில் சீனா மீது கூடுதலாக 50 சதவீதம் வரிவிதிப்பை 9ம் தேதி முதல் விதிப்போம். சீனா எங்களுடன் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் வரிவிதிப்பை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம்” என எச்சரித்துள்ளார்.
ஒருவேளை 50 சதவீதம் கூடுதல் வரியை சீனா மீது அமெரிக்கா விதிக்கும் பட்சத்தில் சீனப் பொருட்களுக்கு 104 சதவீதம் வரியாக அமைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதில் அளித்து சீனா வெளியிட்ட அறிவிப்பில் “ சீனா தன்னுடைய நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
சீன வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “அமெரிக்க எங்கள் மீது பரஸ்பர வரிவிதிப்பு என்று சொல்லக்கூடிய வரியை விதித்துள்ளது. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது, தன்னிச்சையான, கொடுமைப்படுத்தும் முறை. அமெரிக்கா கூடுதலாக வரிவிதித்தால் அதற்குப் பதிலடியாக சீனாவும் வரிவிதிக்கும். சீனாவின் இறையாண்மை, உரிமைகள், நலன்களைப் பாதுகாக்க சர்வதேச வர்த்தகத்தை இயல்வாக வைக்க என்ன தேவையோ அதை சீனா செய்யும். அனைத்தும் சட்டப்பூர்வ நடவடிக்கையாகவே இருக்கும்.
சீனா மீதான வரியை அதிகப்படுத்துவோம் என அமெரிக்கா அச்சுறுத்துவது என்பது தவறுக்கு மேல் தவறு செய்வதாகும். அமெரிக்காவின் மிரட்டல் தன்மை மீண்டும் அம்பலமாகியுள்ளது. சீனா இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அமெரிக்கா எதையாவது கட்டாயப்படுத்தி திணித்தால் அதற்கு பதிலடி கொடுத்து சீனா இறுதிவரை போராடும்” இவ்வாறு சீனா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ட்ரம்ப் எபெக்ட்..! அமெரிக்கா வரி விதிப்பால் இந்தியாவின் ஜிடிபி 0.3% குறையும்: பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை..!