ரூ.300க்கு போதை மாத்திரை விற்பனை? மும்பையில் இருந்து கடத்தி வந்த கும்பல்.. சுத்துப்போட்டு பிடித்த போலீசார்..!
சென்னை கொடுங்கையூரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 570 மாத்திரைகளை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இளைஞர்கள் இடையே சமீப காலமாக போதைபொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் நிழவும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் கொடுமைகள் போன்ற குற்றங்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்துவதே முழு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஏனெனில் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரில் பெரும்பாலோனோர் இளைஞர்கள். அவர்களில் 90 சதவீதற்கும் அதிகமானோர் போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது. இதன் காரணமாக போதைபொருள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் அதிதீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் போலீசாரின் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் வட சென்னையில் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவதாகவும் மேலும் அதனை விற்பனை செய்வதாகவும் புளியந்தோப்பு துணை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. துணை கமிஷ்னரின் உத்தரவின் அடிப்படையில் போலீசார் அவர்களை பிடிக்க உஷார் படுத்தப்பட்டனர். அந்த வகையில் கொடுங்கையூர் போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கவியரசு கண்ணதாசன் பேருந்து நிறுத்தம் அருகே சிலர் போதை மாத்திரைகளை கை மாற்றுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதையும் படிங்க: நாளை தாக்கலாகிறது தமிழக பட்ஜெட்.. சென்னையில் 100 இடங்களில் நேரலையில் பார்க்க ஏற்பாடு.!
அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஐந்து பேரை மடக்கிப் பிடித்தனர். இவர்களிடம் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களின் கைப்பையை சோதனை செய்த போது அதில் இருந்து மொத்தம் 570 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஐந்து சிரஞ்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட ஐந்து பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள், செம்மஞ்சேரி ஆறாவது தெருவை சேர்ந்த தனுஷ், வயது 21. அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 24. கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 30. கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் வயது 20. பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சசிராம் வயது 27. என்பது தெரிய வந்தது.
இதில் கார்த்திக் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், இவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடி என்பதும் தெரிய வந்தது. இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பைக்குச் சென்று அங்குள்ள மருந்து கடையில் ஒரு அட்டை வலி நிவாரண மாத்திரை 415 ரூபாய்க்கு வாங்கி அதனை சென்னைக்கு கொண்டு வந்து ஒரு மாத்திரை 300 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: நாய்களின் உடலில் மைக்ரோ சிப்... தீவிரம் காட்டும் மாநகராட்சி.. ஏன் தெரியுமா..?