×
 

தந்தத்திற்காக கொன்று எரிக்கப்பட்ட யானை.. குற்றவாளியை விரைந்து கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

தர்மபுரியில் யானை வேட்டையாடப்பட்டு, எரிக்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளியை விரைந்து கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில், தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த நெருப்பூர் என்னுமிடத்தில் கடந்த மார்ச் 1 ம் தேதி யானை ஒன்று கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த யானை, தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளதாகவும், ஆதாரங்களை அழிப்பதற்காகவே, அதன் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக  மூன்று சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது  அப்போது, தர்மபுரி மாவட்ட வன அதிகாரி ராஜங்கம் ஆஜராகி, நாட்டு துப்பாக்கியால் யானை சுடப்பட்டு,  அதன் பின்  வேட்டையாடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அப்போது யானை சுடப்பட்டு தான் இருந்தது என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: நீ நல்லா அசந்து தூங்கு தெய்வமே! மதுபோதையில் யானை மேல் மட்டையான பாகன்.. ஒரு மணி நேரம் காத்திருந்த யானை..!

இதற்கு பதிலளித்த வன அதிகாரி, யானை வேட்டையாப்பட்ட இடத்தில் நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் சிதறி கிடந்ததாக தெரிவித்தார்.

யானை வேட்டையாடப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை தேடி வருவதாகவும் வன அதிகாரி குறிப்பிட்டார். தமிழக அரசின் வனத்துறை தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் ஆஜராகி,  இந்த வழக்கில் யானையின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்தார்.

யானைகள் இறந்து விட்டால் என்ன மாதிரியாக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு தான் எனவும் அந்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி தர்மபுரி யானை வேட்டையாடப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், யானையை வேட்டையாடிய குற்றவாளியை விரைந்து பிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டதோடு, வழக்கு தொடர்பான விசாரணை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: தமிழுக்கு தான் முன்னுரிமை..! ஐகோர்ட்டில் அறநிலையத்துறை உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share