அரியானாவில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை... தொடரும் அரசியல் கொலைகள்..!
பஞ்சாப் சிவசேனா தலைவர் கொலையை தொடர்ந்து அரியானாவில் பாஜக தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் கொலை தொடர்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் மோகாவில் சிவசேனா மாவட்ட தலைவர் மர்ம நபர்களால் துரத்திச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் என்கவுண்டர் நடத்தி மூன்று பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அண்டை மாநிலமான அரியானாவில் பாஜக உள்ளூர் தலைவர் ஒருவர் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்டவர் சுரேந்திர ஜவஹர் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். ஹோலி பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை இரவு இந்த கொலை நடந்துள்ளது.
இதையும் படிங்க: ஹரியான உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி..! 7 மாநகராட்சிகளில் மண்ணை கவ்விய காங்கிரஸ்..!
பாஜகவின் மண்டல தலைவராக இவர் பதவி வகித்து வந்தார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் மூன்று முறை அவரை துப்பாக்கியால் சுட்டு இந்த கொலையை அரங்கேற்றி இருக்கிறார். இரவு 9 .15 மணியளவில் அரங்கேறிய இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவசேனா தலைவர் கொலை வழக்கு!
இதற்கிடையில் பஞ்சாப் சிவசேனா தலைவரின் கொலை தொடர்பாக இதுவரை 8 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக மோகா டிஎஸ்பி ரவீந்திர சிங் இன்று கூறினார். இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற போலீஸ் என்கவுண்டரை தொடர்ந்து மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் சேர்த்து மொத்தம் எட்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் மற்றவர்களையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
கொலை செய்யப்பட்ட மங்காராமின் மனைவி வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் சலூன் உரிமையாளர் ஒருவரும் 12 வயது சிறுவனும் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கோவிலில் குண்டு வெடிப்பு!
ஏற்கனவே பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அமிர்தசரசின் கண்டுவாடாவில் உள்ள கோவிலில் இரவில் குண்டு வெடிப்பு நடந்தது தொடர்ந்து மாநிலத்தில் அமைதியை குலைக்க பல முயற்சிகள் நடந்து வருவதாக கூறினார்.
"பஞ்சாபில் அமைதியை குறைப்பதற்காக எப்போதும் முயற்சிகள் நடந்து வருகின்றன. போதை பொருள், குண்டர்கள் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகியவை அதன் ஒரு பகுதியாகும். மேலும் பஞ்சாப் ஒரு கலவரமான மாநிலமாக மாறிவிட்டதாக காட்ட முயற்சி மேற்கொண்டு வரப்படுகிறது. ஹோலி பண்டிகையின் போது மற்ற மாநிலங்களில் ஊர்வலங்களில் போலீசார் தடியடி நடத்த வேண்டி இருந்தது. ஆனால் பஞ்சாபில் இந்த விஷயங்கள் நடப்பதில்லை. பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நிலைமை நன்றாக உள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: காஸ்ட்லி 'லெஹங்கா' அணியாத மணமகள்... வாள் சண்டை போட்ட சம்மந்திகள்... போர்க்களமான திருமண மண்டபம்..!