மதுபோதையில் அராஜகம்.. போலீஸ் எஸ்.ஐ. மண்டை உடைப்பு.. கணவன் - மனைவி கைது..!
சென்னையில் மதுபோதையில் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் கணவன் - மனைவியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பட்டாளம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன். வயது 31. இவர் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு 11 மணி அளவில் புளியந்தோப்பு பார்த்தசாரதி தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஆவின் பால் வண்டியை மடக்கி, அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற நபர் அதீத மது போதையில் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் கீழே இருந்த கற்களை எடுத்து ஆவின் பால் வண்டியின் கண்ணாடிகளை உடைத்து தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி சந்தியா என்பவர் தனது கணவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்ல போராடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உதவி ஆய்வாளர் வெங்கடேசன், சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது ஆவின் வண்டி கண்ணாடிகளை உடைத்து விட்டு, வாகனத்தை ஓட்டி வந்த நபரையும் மதுபோதையில் இருந்த தினேஷ் அடித்து காயப்படுத்தியது தெரிந்தது. அவரை அவரது மனைவி சந்தியா அழைத்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனை அடுத்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த உதவி ஆய்வாளர் வெங்கடேஷன், அதனை பின்தொடர்ந்து சென்று தினேஷ் வீட்டை அடைந்தார். குடி போதையில் தகராறு செய்தாயா? ஆவின் வண்டி கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தினாயா? என்று விசாரித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் பாணா காத்தாடி? சட்டவிரோதமாக காத்தாடி, மது விற்பனை? கொடுங்கையூரில் 2 பேர் கைது..!
முறையாக விசாரிக்க வேண்டும் என்னுடன் காவல் நிலையம் வா? என்று தன்னுடன் காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளார். இதற்கு அவரது மனைவி சந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உதவி ஆய்வாளர் வெங்கடேஷனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கீழே இருந்த கற்களை எடுத்து உதவி ஆய்வாளரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் உதவி ஆய்வாளர் வெங்கடேஷன் தலையில் ரத்த காயம் ஏற்பட்டது. அதன்பின் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் நேராகபேசின் பிரிட்ஜ் காவல் நிலையம் சென்று நடந்தவை குறித்து புகார் அளித்தார்.
போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இன்று காலை புளியந்தோப்பை சேர்ந்த தினேஷ் (வயது 23) மற்றும் அவரது மனைவி சந்தியா (வயது 22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கு குறித்து விசாரணை நடத்த சென்ற போலீசாரை தாக்கி அவரது மண்டையை உடைத்த கணவன் - மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சென்னை மீனவர்களுக்கு ஜாக்பாட்.. தங்கத்தை மிஞ்சும் மீன் விலை.. கடலில் கிடைத்த புதையல்..!