ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியா? புறக்கணிப்பா? - என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 5.ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021.ம் ஆண்டு பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவர் மறைவிற்கு பின் இந்த தொகுதியில் 2023.ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமான நிலையில், தற்போது 2வது முறையாக ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் 3வது முறையாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுகவே போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக V.C.சந்திரகுமார் போட்டியிடுவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையும் படிங்க: ‘திராவிடம் என்றால் வயிறு எரிகிறது... அதிமுகவை பார்த்தால் கோபம் வரவில்லை... சிரிப்புத்தான் வருகிறது...’ கோப-தாபத்துடன் முழங்கிய மு.க.ஸ்டாலின்
திமுக வேட்பாளரை அறிவித்த நிலையில், தற்போது அனைவரது பார்வையும் அதிமுக பக்கம் திரும்பியுள்ளது. இதனிடையே இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போகிறதா? அல்லது புறக்கணிக்கப்போகிறதா? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அதிமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் மற்றொரு தரப்போ, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அது பாஜகவிற்கு சாதகமாகிவிடும் என்றும், நிச்சயம் அதிமுக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்தாலோசித்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ''நான் தான் அந்த சார்!” பொல்லாத போஸ்டர் அடித்து அதிமுக-வை பொள்ளாச்சியில் பொளக்கும் திமுக.!