6 மணி நேரத்தில் அடித்து தூள் கிளப்ப தயாராகும் ஜப்பான்... நாளை நடக்கப்போகும் தரமான சம்பவம்...!
முதல்முறையாக ரயில்வே கட்டுமானத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெறப்போகிறது.
ஜப்பானில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நடந்து வருகிறது. அங்கு முதல்முறையாக ரயில்வே கட்டுமானத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெறப்போகிறது. ஆம், மேற்கு ஜப்பான் ரயில்வே உலகின் முதல் 3D Printedரயில் நிலையத்தைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால் இந்த திட்டம் முழுமையாக முடிவடைவதற்கு வெறும் ஆறு மணிநேரம் மட்டும் போதுமாம்.
இந்த தனித்துவமான ரயில் நிலையம் ஒசாகாவிலிருந்து சுமார் 60 மைல் தெற்கே வகயாமா மாகாணத்தில் அமையப் போகிறது. புதிதாகக் கட்டப்படவுள்ள இந்த ரயில் நிலையம், ஏற்கனவே மரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள ஹட்சுஷிமா நிலையத்தை முழுமையாகப் புதுப்பித்து, கான்கிரீட்டால் ஆன நவீன ஒற்றை மாடிக் கட்டிடமாக மாற்றவுள்ளது. இந்த ரயில் நிலையம் அழகிய மற்றும் அமைதியான சூழலுக்குப் பெயர் பெற்றதாகும்.
இதையும் படிங்க: ஜப்பானில் தொடங்கியது கொண்டாட்டம்: வசந்த காலத்தில் மனம் குளிர்விக்க பூத்த சகுரா..!
புதிய நிலையக் கட்டிடம் 10 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவில், வெறும் 2.6 மீட்டர் உயரமும், 6.3 மீட்டர் அகலமும், 2.1 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில் நிலையத்தின் சுவர்களை அரிடா நகரின் புகழ்பெற்ற ஆரஞ்சுகள் மற்றும் டச்சியுவோ மீன்களின் படங்கள் அலங்கரிக்கவுள்ளன.
கட்டிடத்தின் கட்டமைப்பு உயர் தொழில்நுட்ப 3D பிரிண்டர்களைக் கொண்டு தயாரிக்கப்படவுள்ளது. 3 டி அச்சுக்கள் ரெடியானதும், பாகங்கள் கான்கிரீட்டால் நிரப்பப்படும். அவை கிரேன் உதவியுடன் ஒவ்வொன்றாக ஒன்று சேர்க்கப்பட்டு கட்டிடம் உருவாக்கப்படவுள்ளது. பழைய ரயில் நிலையத்தை இடிப்பதில் இருந்து புதிய நிலையத்தை ஒன்றிணைப்பது வரை முழு செயல்முறையும் முடிவடைய ஆறு மணிநேரம் மட்டுமே ஆகும் என்று மேற்கு ஜப்பான் ரயில்வே கூறுகிறது. கடைசி ரயில் புறப்பட்ட பிறகு, மார்ச் 25 ஆம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கி, மறுநாள் காலை முதல் ரயில் வருவதற்கு முன்பு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 50 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ.. ஜப்பானை புரட்டிப்போடும் இயற்கை.. பாதுகாப்பான இடங்களை தேடி ஓடும் மக்கள்..!