ஆண்கள்தான் 90 சதவீதம் முதல்வரா இருக்காங்க ! கனிமொழி ஆதங்கம்…
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 90% ஆண்களே முதல்வராக உள்ளனர் என கனிமொழி எம். பி. ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இந்திய உணவுக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை சேத்துப்பட்டில் மண்டல அலுவலகத்தில், இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல நிர்வாக இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்.பியும் உணவு மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலை குழு தலைவருமான கனிமொழி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளை விரைவுபடுத்துவது என்ற கையெழுத்து இயக்கத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி தென்மண்டல அளவில் நடத்தப்பட்ட கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற உணவுக் கழகத்தின் ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இதையும் படிங்க: “உன் இந்தியா வேற, என் இந்தியா வேற” - திமுக எம்.பி. கனிமொழி ஆவேசம்...!
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மகளிர் தினத்தை கொண்டாடுவது என்பது இந்த சமூகத்தில் நமக்கும் சம உரிமை வேண்டும் என்பதற்காக தான் என கூறினார். இந்திய உணவுக் கழகத்தின் தென்மண்டல பிரிவில் 30 சதவீதம் தான் பெண்கள் பணிபுரிந்து வருவதாகவும் இன்னும் 50 சதவீதத்தைக் கூட தொடவில்லை என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒப்பிடும்போது இது சிறந்த எண்ணிக்கையாக தெரிகிறது எனக்கூறிய கனிமொழி, பல்வேறு அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் விட இந்திய உணவுக் கழகம் இதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றே கூறலாம் என தெரிவித்தார்.
இந்த உலகத்தில் உள்ள அத்தனை வாய்ப்புகளையும் பெண்கள் பயன்படுத்த உரிமை உண்டு என்றும் நாட்டில் 90 சதவீதம் ஆண்கள் தான் முதல்வராக உள்ளனர் என்றும் ஏன் பிரதமர் கூட ஒரு ஆண் தான் எனவும் கூறினார். ஆனால் டெல்லியில் ஒரு பெண் முதல்வராக பொறுப்பேற்ற போது அவர் பெண் என்பதால் தான் முதல்வராக்கப்பட்டுள்ளார் என்று நாடாளுமன்ற வளாகத்திலேயே சிலர் பேசியதாக தெரிவித்தார்.
ஒரு பெண் தலைமை இடத்திற்கு வரும்போதுதான் ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் அந்த மனத்தடையை உடைத்து எங்கள் சமூகத்தை எதிர்கொள்ளும் போது தான் எங்கள் கூறுவதை இந்த சமூகம் கவனிக்கத் தொடங்கும் கூறினார்.
இதையும் படிங்க: அதீத கவன சிதறல்... உளறிக் கொட்டும் திண்டுக்கல் சீனிவாசன்..!