‘குட்பை’ சொல்லிடுவோம்! பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு அதிபர் ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் அமெரிக்க டாலருக்கு எதிராகவும், மாற்றாகவும் புதிய கரன்சியை உருவாக்க முயன்றால் 100 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவிஏற்ற அன்று, இதேபோன்று பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த அதிபர் ட்ரம்ப் இப்போது 2வது முறையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 10 நாடுகள் உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்தே அமெரிக்காதான் முன்னிலை, அமெரிக்காவை முன்னிலைப்படுத்தியே அனைத்து செயல்களையும் செய்துள்ளார். உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் உத்தரவில் கையொப்பமிட்டால், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்றும் முயற்சியில் கையொப்பமிட்டுள்ளார் இதுபோன்று அதிரடியான முடிவுகளை ட்ரம்ப் எடுத்து வருகிறார்.
அதிபராக பதவி ஏற்ற அன்றே அதிபர் ட்ரம்ப் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் ஒன்று சேர்ந்து அமெரிக்காவை ஓரம்கட்ட நினைத்தால், டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை உருவாக்க முயற்சித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் நேற்று சமூகவலைத்தளத்தில் மீண்டும் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் தங்களின் வர்த்தக நலனுக்காக டாலர் பயன்பாட்டிலிருந்து வேறு நாணயத்துக்கும், கரன்சிக்கும் மாற முயல்கிறார்கள். நாங்கள் இதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அமெரிக்காவுக்கு எதிராக விரோதப் போக்குடைய நாடுகளுக்கு எதிராக நாங்கள் உறுதிப்பாட்டை எடுத்துள்ளோம். அதாவது பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து தங்கள் கூட்டமைப்புக்காக தனி நாணயத்தை, கரன்சியை உருவாக்கவோ, வலிமையான அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு எந்த கரன்சியை ஆதரிக்கவோ நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
அவ்வாறு பிரிக்ஸ் நாடுகல் செயல்பட்டால், பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 100% வரிகளை எதிர்கொள்ள நேரிடும். அதுமட்டுமல்லாமல் அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் உங்கள் பொருட்களை விற்பனை செய்வதிலிருந்து குட்பை சொல்வதை எதிர்பார்க்க வேண்டும்.
சர்வதேச வர்த்தகத்திலோ அல்லது வேறு எங்குமோ அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு எந்த கரன்சியையும் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு ஏதாவது ஒரு நாடு செயல்பட்டால், கடும் வரிவிதிப்புக்கு ஹலோ சொல்லிவிட்டு, அமெரிக்காவுக்கு குட்பை சொல்ல வேண்டியதிருக்கும்இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உண்மையில், உலக வர்த்தகத்தில் பரிவர்த்தனையில் 90 சதவீதம் அமெரிக்க டாலர்களே பங்கு வகிக்கின்றன. அல்லது மாற்றக்கூடிய கரன்சிகளான ஜப்பானின் யென், பிரிட்டனின் பவுண்ட், யூரோ கரன்சிகள் உள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு பேட்டியில் கூறுகையில் “ அமெரிக்க டாலரை ஒதுக்கியோ அல்லது பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து புதிய கரன்சியை உருவாக்கும் எண்ணம் இல்லை” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசி உரையாடல்... பிரதமர் மோடி சொன்ன முக்கிய அப்டேட்..!
இதையும் படிங்க: அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம்... டிரம்ப் முடிவு இந்தியர்களுக்கு சிக்கல்..!