“மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை”... அரசு விளக்கத்தால் அதிர்ந்த நீதிபதிகள் - காவல்துறைக்கு அதிரடி உத்தரவு!
எங்கு, எப்போது அனுமதி வழங்க இயலும்? என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரியும், இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என காவல்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையை ரத்து செய்ய கோரியும் தொடரப்பட்ட வழக்கில், எங்கு, எப்போது அனுமதி வழங்க இயலும்? என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சுந்தரவடிவேல் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக அனுமதி கோரியிருந்த நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காண்பித்து அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு காவல்துறை தரப்பில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் அதில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், அதனை மீறி வருபவர்கள் மீதும், அவர்களுடைய வாகனங்கள் மீதும், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஏற்கத்தக்கது அல்ல. அதோடு திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருப்பரங்குன்றம் பகுதியில் இருக்கும் 72 திருமண மண்டபங்களையும், வாடகைக்கு விடுவதற்கு முன்பாக காவல்துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது ஏற்கத்தக்கது அல்ல. சுற்றுலா வருவோரையும் அச்சுறுத்தும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளது. அதோடு மதுரை மாவட்ட ஆட்சியர் சட்ட, ஒழுங்கு பிரச்சனையை காரணம் காண்பித்து நேற்று இன்றும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் தெப்ப உற்சவ திருவிழாவை காண வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளவர். ஆகவே மதுரை மாவட்ட ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... எங்கள சீண்டாதீங்க... கொதித்தெழுந்த அண்ணாமலை!
இதேபோல மதுரை மாவட்டம் உத்தங்குடி சேர்ந்த முருகன், "திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் வாகனங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பிறப்பித்த செய்தி அறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என தனியே மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், "அமைதியான முறையில் திருப்பரங்குன்றம்ய் மலையை பாதுகாக்க வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இன்று காலை முதல் திருப்பரங்குன்றம் பகுதிக்கு செல்லவே யாரும் அனுமதிக்கப்படவில்லை. மலை உச்சியில் இஸ்லாமியர்களால் அசைவ பிரியாணி தயாரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டது.
அரசுத்தரப்பில், "ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை உரிமை பிரச்சனை தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. விழாகாலங்களில் இதுபோல போராட்டங்களை நடத்த அனுமதிக்க இயலாது. மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை உருவாகிவிடக் கூடாது. இதன் காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், " பக்தர்களின் உணர்வை மதிப்பதாக கூறும் அரசுத்தரப்பு, இன்றைய தினம் பக்தர்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை." என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், "அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் கலந்து கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி அறிக்கை வெளியிட்டது சரியான நடவடிக்கையாக தெரியவில்லை" என கருத்து தெரிவித்தனர்.
அரசுத்தரப்பில், "11 ஆம் தேதி வரை விழா காலம் என்பதால் அதுவரை அனுமதிப்பது கடினம்" என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், "எங்கு, எப்போது அனுமதி வழங்க இயலும்? என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவு, சென்னையில் திமுக புகார்...கைதாகிறார் சீமான்?